மேக்ஸ்வெல்லின் துணிச்சலை வியந்து புகழ்ந்த ஜஸ்டின் லாங்கர்

By karthikeyan VFirst Published Oct 31, 2019, 4:48 PM IST
Highlights

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல், மனரீதியாக தெளிவாக இல்லாததால் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட்டிலிருந்து சில காலத்திற்கு விலகியுள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டரிலும் டெத் ஓவர்களிலும் மேக்ஸ்வெல் வலுசேர்க்கிறார். வெகுசில பந்துகளில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பக்கூடிய திறன் பெற்றவர் மேக்ஸ்வெல். இலங்கைக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கூட ஆடினார். அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து மிரட்டினார். இரண்டாவது போட்டியில், ஸ்மித்தும் வார்னரும் இணைந்தே போட்டியை முடித்துவிட்டதால், மேக்ஸ்வெல்லுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில், மனரீதியாக சில பிரச்னைகள் இருப்பதால், சில காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பி, எவ்வளவு காலம் என்பதை குறிப்பிடாமல் தற்காலிகமாக விலகியுள்ளார் மேக்ஸ்வெல். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், மேக்ஸ்வெல் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரிய அடி. 

மேக்ஸ்வெல் தற்காலிகமாக விலகியிருப்பது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், கடந்த ஓராண்டில் மேக்ஸ்வெல்லை பல முறை கவனித்திருக்கிறேன். அவர் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையாக போராடுகிறார் என்பதை தெரிந்துகொண்டேன். அதிலும் குறிப்பாக அடிலெய்டில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் போட்டிக்கு முந்தைய நாள் அவர், அவராகவே இல்லை. 

களத்திலும் கூட நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முதல் போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டியிலும் சரி, இரண்டு போட்டிகளிலுமே அவர் ஒருமாதிரியாகத்தான் இருந்தார். அனைவரையும் எண்டெர்டெயின் செய்யும் வீரர் அவர். சமீபகாலங்களில் அவர் சரியில்லை. ஆனால் மனரீதியாக முழு ஆரோக்கியத்துடன் இல்லை என்பதை ஒப்புக்கொள்வதற்கு தனி தைரியம் வேண்டும். மேக்ஸ்வெல் மிக தைரியமாக முன்வந்து தனது பிரச்னையை ஒப்புக்கொண்டுள்ளார் என்று மேக்ஸ்வெல்லை ஜஸ்டின் லாங்கர் புகழ்ந்து பேசினார். 
 

click me!