Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்

Published : May 19, 2026, 03:53 PM IST
Ishan Kishan Mocks CSK Fans at Chepauk After SRH Win Pushes Chennai to Exit

சுருக்கம்

Ishan Kishan Trolls CSK Fans: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

Ishan Kishan Trolls CSK Fans:  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் கனவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன், சென்னை ரசிகர்களைப் பார்த்து செய்த ஒரு சைகை, இப்போது பெரிய விவாதமாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில், ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி நிர்ணயித்த 181 ரன்கள் என்ற இலக்கை, ஹைதராபாத் அணி ஒரு ஓவர் மீதமிருக்கும்போதே எட்டியது. இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் வெறும் 47 பந்துகளில் 70 ரன்கள் விளாசி, ஹைதராபாத் அணியின் டாப் ஸ்கோரராகவும், ஆட்ட நாயகனாகவும் இஷான் கிஷன் ஜொலித்தார். போட்டி முடிந்த பிறகு, கேலரியில் இருந்த CSK ரசிகர்களைப் பார்த்து 'விசில் போடு' என்று சைகை காட்டிய இஷான், பிறகு மைதானத்தை விட்டு வெளியேறும் வழியைக் காட்டி, 'இனி வீட்டுக்கு போய் விசில் அடிங்க' என்பது போல கிண்டல் செய்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ 

 

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. கேப்டன் ருதுராஜ் (21 பந்துகளில் 15 ரன்கள், ஒரு பவுண்டரி கூட இல்லை) அழுத்தத்துடன் ஆடினார். ஆனால், மிடில் ஆர்டரில் களமிறங்கிய டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்கள் அடித்து, அணியின் ஸ்கோரை 180/7 ஆக உயர்த்த உதவினார். ஹைதராபாத் தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

181 ரன்கள் இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணிக்கு, சென்னை பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் அழுத்தம் கொடுத்தனர். ஆனால், இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் (26 பந்துகளில் 47 ரன்கள்) ஜோடி சேர்ந்த பிறகு, ஆட்டத்தின் போக்கே மாறியது. இவர்களது 75 ரன்கள் பார்ட்னர்ஷிப், CSK-வின் கையில் இருந்து போட்டியைப் பறித்தது.

இந்தத் தோல்வியின் மூலம், 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது. சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், தனது கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஒரே இடத்திற்கு ஐந்து அணிகள் போட்டி:

19-வது ஐபிஎல் சீசனில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. CSK-க்கு எதிரான வெற்றியின் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துள்ளன. இப்போது மீதமுள்ள ஒரு இடத்திற்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கனவே பந்தயத்தில் இருந்து வெளியேறிவிட்டன. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போட்டியில் நீடிக்கின்றன.

பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 13 புள்ளிகளையும், ராஜஸ்தான் 12 போட்டிகளில் 12 புள்ளிகளையும், சென்னை 13 போட்டிகளில் 12 புள்ளிகளையும், டெல்லி 13 போட்டிகளில் 12 புள்ளிகளையும், கொல்கத்தா 12 போட்டிகளில் 11 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 15 புள்ளிகளையும், சென்னை மற்றும் டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளையும் பெற முடியும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!