பும்ராவை மட்டம்தட்ட நினைத்த அப்துல் ரசாக்கின் மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்

By karthikeyan VFirst Published Dec 6, 2019, 10:34 AM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலராக திகழும் பும்ராவை மட்டம்தட்டும் விதமாக பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறிய கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் இர்ஃபான் பதான். 
 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சும்மா இருக்க முடியாமல், வாயை கொடுத்து வாங்கிக்கட்டிவருகிறார். தற்போதைய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் நிறைய பேர் இல்லை என்றும் 1990கள் மற்றும் 2000ம்கள் காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டதாகவும் கூறுவதற்காக ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொன்னார் ரசாக்.

அதில், சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் குறித்தும் பேசினார். கோலி மற்றும் பும்ரா குறித்து பேசிய அப்துல் ரசாக், 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆடிய வீரர்களிடம் கேளுங்கள்.. உண்மையான கிரிக்கெட் என்றால் என்னவென்று அவர்கள் சொல்லுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் பல தலைசிறந்த வீரர்கள் ஆடினார்கள். இப்போதெல்லாம் அந்தளவிற்கு உலகத்தரமான நிறைய வீரர்கள் கிடையாது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலுமே டெப்த் கிடையாது. எல்லாமே அடிப்படை லெவலில்தான் உள்ளது. 

விராட் கோலி தொடர்ச்சியாக சீராக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். அவர் சிறந்த வீரர் தான். ஆனால் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது. அவரது லெவலே வேறு. இப்போது என்னையே எடுத்துக்கொள்வோம். எனக்கு பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்வது பெரிய விஷயமே கிடையாது. பும்ராவின் பவுலிங்கை நான் எதிர்கொண்டால், பும்ரா உண்மையான அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணர்வார். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், மெக்ராத், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பவுலர்களை எதிர்கொண்டால், பேட்ஸ்மேனுக்கு தானாகவே நம்பிக்கை அதிகரித்துவிடும். எனவே எனக்கெல்லாம் பும்ரா குழந்தை பவுலர். அவர் மீது என்னால் எளிதாக ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியும் என்று அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.

பும்ராவெல்லாம் தனக்கு குழந்தை பவுலர் என்று விமர்சித்ததற்காக அப்துல் ரசாக்கை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து கடுமையாக கிண்டலடித்து மூக்கை உடைத்தனர். 

இந்நிலையில், அவரது கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை 2004ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியாந்தத் கிண்டலடித்ததை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இர்ஃபான் பதான் இந்திய அணியில் அறிமுகமான புதிதில், இவரை(இர்ஃபான்) போன்ற பவுலர் பாகிஸ்தானில் தெருவுக்கு தெரு இருக்கிறார்கள் என்று நக்கலடித்தார். இப்படி கிண்டலடித்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2006ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, அந்த கிண்டலுக்கு திறமையின் மூலம் பதிலடி கொடுத்தார் இர்ஃபான் பதான். 

எனவே, அந்த சம்பவத்தை நினைவூட்டி, அப்துல் ரசாக்கிற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் இர்ஃபான் பதான். அதில், இர்ஃபான் பதான் தெருவில் ஆடும் பவுலராக இருக்கலாம். ஆனால் நாங்கள் வீசினால் ஸ்டம்ப் தெறிக்கும். எனவே இதுபோன்ற தேவையில்லாத, மோசமான கருத்துகளை எல்லாம் ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம். இதையெல்லாம்(ரசாக்கின் கருத்து) படித்து சிரித்துவிட்டு அத்துடன் விட்டுவிடுங்கள் என்று ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!