எப்போ என்ன செய்யணும்னு எங்க “தல”க்கு தெரியும்.. கேப்டன் கோலி அதிரடி

By karthikeyan VFirst Published Jun 28, 2019, 12:50 PM IST
Highlights

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் தொடர்ந்து சிக்கலாகவே இருக்கிறது. ஆனால் தோனி மட்டுமே நிலையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இனிமேல் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 

உலக கோப்பையில் பேட்டிங்கைவிட இந்திய அணியின் பவுலிங் தான் மிரட்டலாக உள்ளது. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் மிரட்டினர். புவனேஷ்வர் குமார் காயத்தால் விலகியதை அடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி, அவரை விட ஒரு படி மேலே போய் மிரட்டுகிறார். 

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் தொடர்ந்து சிக்கலாகவே இருக்கிறது. ஆனால் தோனி மட்டுமே நிலையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரொம்ப நிதானமாக ஆடி 52 பந்துகளில் 28 ரன்கள் அடித்து, பந்துக்கும் ரன்னுக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட, டெத் ஓவர்கள் வரை களத்தில் இல்லாமல் பந்துகளை முழுங்கிவிட்டு ஆட்டமிழந்தார் தோனி. இதையடுத்து தோனியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கோலியும் 72 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு பொறுப்பு தோனியின் மீது இறங்கியது. இந்த முறையும் சற்று மந்தமாகவே ஆடிய தோனி, அவுட்டாகாமல் கடைசிவரை களத்தில் நின்றார். அதனால் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். தோனி களத்தில் நீண்டநேரம் ஆடினால், அந்த ஆடுகளத்திற்கு எந்த ஸ்கோர் போதுமானது என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதை எட்டுவதற்கு தேவையான விஷயங்களை செய்துவிடுவார். அதைத்தான் நேற்றும் செய்தார். 

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, தோனி மந்தமாக ஆடுகிறார் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மிடில் ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும். அவரது அனுபவம் அணிக்கு 10ல் 8 முறை பெரிய உதவிகரமாக அமையும். தோனி மாதிரியான ஒரு வீரர் அணியில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். கூடுதலாக தேவைப்படும் அந்த 15-20 ரன்களை எப்படி எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். குறிப்பிட்ட ஒரு போட்டிக்கு என்ன வேண்டுமோ, அதற்கு அவர் வைத்திருக்கும் திட்டங்களை சரியாக செயல்படுத்தி அதை செய்து கொடுப்பார். 260 ரன்கள் போதுமானது என்பது தோனிக்கு தெரியும். அவர் ஒரு லெஜண்ட். இதேமாதிரியான சிறந்த ஆட்டத்தை அவர் தொடர்ந்து அளிப்பார் என நம்புவதாக கோலி தெரிவித்தார். 
 

click me!