இந்திய அணிக்கு அடி மேல் அடி.. தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து ஆல்ரவுண்டருக்கும் காயம்

By karthikeyan VFirst Published Jun 20, 2019, 3:59 PM IST
Highlights

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணி நன்றாக ஆடிவரும் நிலையில், வீரர்களின் காயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் உலக கோப்பை தொடரிலிருந்தே விலகியுள்ளார் தவான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஆஃப்கானிஸ்தானுடன் இந்திய அணி மோதவுள்ள நிலையில், பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கரில் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது. தவான் அணியில் இல்லாததால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார். எனவே விஜய் சங்கர் தான் நான்காம் வரிசையில் இறங்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் எடுக்கப்பட வாய்ப்பு மிகக்குறைவு. அப்படியிருக்கையில், விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த காயம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வந்தால்தான் தெரியும். 

click me!