வெறும் பத்தே பந்தில் எதிரணியை துவம்சம் செய்த கிருஷ்ணப்பா கௌதம்.. இந்தியா சி அணிக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Nov 4, 2019, 12:39 PM IST
Highlights

தியோதர் டிராபி தொடரின் இறுதி போட்டியில், கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங், விஜய் சங்கர் மற்றும் கிருஷ்ணப்பா கௌதமின் அதிரடியான பேட்டிங்கால், இந்தியா சி அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்தியா பி அணி. 
 

தியோதர் டிராபியின் இறுதி போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியும் இறுதி போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இந்தியா பி அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் களமிறங்கினர். கெய்க்வாட் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். பார்த்திவ் படேலும் சரியாக ஆடவில்லை. பார்த்திவ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த தமிழக வீரர் பாபா அபரஜித்தும் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. அபரஜித் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 

நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 79 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட்டானார். நிதிஷ் ராணா 20 ரன்கள் மட்டுமே அடித்தார். ஜெய்ஸ்வால், ராணா ஆகியோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார் அனுபவ வீரர் கேதர் ஜாதவ். கேதர் ஜாதவ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆறாம் வரிசையில் இறங்கிய விஜய் சங்கர், அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். கேதர் நிதானமாக ஆட, விஜய் சங்கர் அடித்து ஆடினார். 

33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் அடித்த விஜய் சங்கர், 48வது ஓவரின் கடைசி பந்தில ஆட்டமிழந்தார். 48 ஓவரில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்திருந்தது. விஜய் சங்கரின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், கடைசி இரண்டு ஓவரில் காட்டடி அடித்து அணியின் ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தினார். 

திவேஷ் பதானியா வீசிய 49வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசினார் கிருஷ்ணப்பா கௌதம். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 31 ரன்கள் அடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார் கௌதம். கடைசி ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. கிருஷ்ணப்பா கௌதமின் கடைசி நேர அதிரடியால் இந்தியா பி அணி 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது. கிருஷ்ணப்பா கௌதம் வெறும் 10 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 

இந்தியா சி அணி 284 ரன்கள் இலக்குடன் ஆடிவருகிறது. 
 

click me!