அவருக்கு என்னங்க குறை..? நம்பவச்சு ஏமாத்தாதீங்க.. இந்திய வீரருக்காக வரிந்துகட்டிய ஹைடன்

By karthikeyan VFirst Published Mar 17, 2019, 6:40 PM IST
Highlights

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

இந்நிலையில், பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவித்துவருகின்றனர். முன்னாள் கேப்டன் கங்குலி, யாரும் எதிர்பாராத வகையில் புஜாராவின் பெயரை பரிந்துரைத்தார். முன்னாள் சுழல் ஜாம்பவான் கும்ப்ளே, தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். கேஎல் ராகுலை நான்காம் வரிசையில் இறக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

இவ்வாறு இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கல் இன்னும் தீராத நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஹைடன், ராயுடுவே நான்காம் வரிசையில் ஆடலாம். அவர் நன்றாக ஆடிவந்த போதும் கூட இந்திய அணி இன்னும் 4ம் வரிசை வீரரை தேடிக்கொண்டிருப்பதை என்னால் நம்பமுடியவில்லை. ராகுல் அந்த இடத்திற்கு சரியாக வருவார் என நான் நினைக்கவில்லை. அவருக்கான காலம் வரும். ஆனால் இப்போதைக்கு ராயுடுதான் 4ம் வரிசைக்கு சரியான வீரர் என்று ஹைடன் தெரிவித்துள்ளார்.
 

click me!