
ஐபிஎல்லில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கே, ஐபிஎல் அணிகளில் பெருந்திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி. தோனியின் ரசிகர்களும், தமிழ்நாட்டு ரசிகர்களும் இணைந்து சிஎஸ்கே அணியை கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போன ஒன்றாகிவிட்டது சிஎஸ்கே.
சிஎஸ்கே என்பது வெறும் ஐபிஎல் அணியாக மட்டுமல்லாது, தங்கள் குடும்பத்தை போன்று ஓர் உணர்வை ரசிகர்கள் பெற்றிருந்தனர். சிஎஸ்கேவையும் தோனியையும் கொண்டாடுவதுடன், சிஎஸ்கேவின் வெறித்தனமான ரசிகர்களாக திகழ்கின்றனர்.
இந்நிலையில், ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவரை எடுத்ததால், தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி 21 வீரர்களை எடுத்தது. ஏலத்திற்கு முன்பாக தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது.
ஒரு அணிக்கு ரூ. 90 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.87.05 கோடி கொடுத்து 25 வீரர்களை எடுத்துள்ளது. இவர்களில் 17 வீரர்கள் இந்தியர்கள்; 8 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
இந்த 8 வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர். இலங்கையை சேர்ந்த மஹீஷ் தீக்ஷனா. இலங்கை ஆஃப் ஸ்பின்னரான மஹீஷ் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.
இலங்கை வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுத்ததை தமிழ்நாட்டு ரசிகர்கள் விரும்பவில்லை. தாங்கள் இதுவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிய தமிழ்நாட்டு ரசிகர்கள், இலங்கை வீரர் தீக்ஷனாவை அணியில் எடுத்ததையடுத்து, சிஎஸ்கேவை புறக்கணிப்போம் (#BoycottChennaiSuperKings) என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கிவருகின்றனர். அந்த ஹேஷ்டேக்கின் கீழ் ரசிகர்கள் ஏகப்பட்ட டுவீட்டை தெறிக்கவிட்டுவிடுகின்றனர்.