2 ஆண்டுக்கு பின் சேர்ந்து ஆடும் ஸ்பின் ஜோடி..? இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி.. ஹர்ஷா போக்ளேவின் தேர்வு

By karthikeyan VFirst Published May 26, 2021, 3:17 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

கோலி, ரோஹித் என அணியின் சீனியர் நட்சத்திர வீரர்கள் ஆடாத இலங்கை தொடருக்கான இந்திய ஒருநாள் அணியை சீனியர் வர்ணனையாளரும் கிரிக்கெட் பத்திரிகையாளருமான ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தொடக்க வீரர்களாக அனுபவ தவான், இளம் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசை வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளார்.

5ம் வரிசையில் மனீஷ் பாண்டே, ஆல்ரவுண்டர்களாக பாண்டியா பிரதர்ஸ், ஸ்பின்னர்களாக சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் 2019 உலக கோப்பைக்கு பின்னர் இணைந்து இந்திய அணியில் ஆடவேயில்லை. இந்நிலையில், அஷ்வின், ஜடேஜா, சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால்,இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடமாட்டார்கள். அதனால் சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் தான் ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர்கள் இருவரையும் சேர்த்து தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.
 

click me!