துபாய்க்கு போறோம்னு சொன்னான்.. நிச்சயதார்த்தம்னு சொல்லலயேப்பா.. ஹர்திக் பாண்டியாவின் தந்தை அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Jan 4, 2020, 2:31 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா தனது காதலியான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் துபாயில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிறகுதான் அந்த விஷயம் தங்களுக்கு தெரியும் என ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா தெரிவித்துள்ளார். 
 

2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான திறமையாலும், சிறப்பான பங்களிப்பாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று விதமான அணிகளிலும் நிரந்தர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

முகுதுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பெரிதாக ஆடவேவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பெங்களூருவில் நடந்த போட்டியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் நடந்த வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடாமல் ஓய்வும் பயிற்சியும் பெற்று வந்தார். அடுத்ததாக நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியிலும் பாண்டியா இல்லை. ஆனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான  இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். எனவே அப்படியே, நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் பாண்டியா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவிற்கும் நடிகை நடாஷாவிற்கும் இடையே காதல் என்ற பேசப்பட்டது. 

நடிகை நடாஷா, பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனமாடிவருகிறார். தமிழில் வெளியான அரிமா நம்பியில் கூட ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடினாலும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் 8 சீசனில் கலந்துகொண்டு தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

நடாஷாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே காதல் என்று பேசப்பட்ட நிலையில், துபாயில் படகில் வைத்து,நடிகை நடாஷாவுக்கு மோதிரம் அணிவித்து முத்தம் கொடுத்த தனது நிச்சயதார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஹர்திக் பாண்டியா. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா, நடாஷா ரொம்ப நல்ல பெண். நாங்கள் மும்பையில் சில முறை நடாஷாவை சந்தித்து பேசியிருக்கிறோம். அவர்கள் இருவரும் துபாய்க்கு செல்வது எங்களுக்கு தெரியும். ஆனால் நிச்சயதார்த்தத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கே இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் எங்களுக்கே தெரியும் என்று ஹர்திக்கின் தந்தை ஹிமான்ஷூ பாண்டியா தெரிவித்துள்ளார். 
 

click me!