ஐபிஎல் 2020: அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலை அல்லு தெறிக்கவிட அந்த ஒரு பவுலரால் மட்டுமே முடியும்.. கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 9, 2020, 3:38 PM IST
Highlights

கேகேஆர் அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலுக்கு நெருக்கடி கொடுக்கவல்ல பவுலர் ஒருவர் மட்டுமே என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த சீசனில் ஒருசில வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல்.

கேகேஆர் அணியின் முக்கியமான தூணாக திகழ்கிறார் ஆண்ட்ரே ரசல். டெத் ஓவர்களில், நெருக்கடியான சூழலில், அசாத்திய இலக்கைக்கூட தனது அதிரடியால் அடித்துவிடக்கூடியவர் ஆண்ட்ரே ரசல். 

கடந்த சீசனில் தனி ஒருவனாக பல போட்டிகளில் அருமையாக ஆடி அசத்தினார். நல்ல உடல்வலிமை கொண்ட ஆண்ட்ரே ரசல், சில பந்துகளில் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய அளவிற்கு அதிரடி பேட்ஸ்மேன். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக அசாத்திய இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார்.

ஒன்றிரண்டு ஓவர்களில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றவல்ல ஆண்ட்ரே ரசலின் டி20 கிரிக்கெட் ஸ்டிரைக் ரேட் 170.06. கடந்த சீசனில் அவர் செம ஃபார்மில், மிக அபாரமாக ஆடி மிரட்டிய போதிலும், அவர் முன்வரிசையில் இறக்கப்படாமல் தொடர்ந்து பின்வரிசையிலேயே இறக்கப்பட்டார். அதனால் அவரால் அதிகமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல்போனது. அது அவருக்கு மட்டுமல்லாது அவர் ஆடும் கேகேஆர் அணிக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது. அதுகுறித்த அதிருப்தியை அவர் மட்டுமல்லாது பலரும் வெளிப்படுத்தினர். ஆனால் அப்படியிருந்தும் கூட, கடந்த சீசனில் 204.81 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 510 ரன்களை குவித்தார்.

இந்த சீசனில் அவரை முன்வரிசையில் இறக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. இதை வலியுறுத்தியவர்களில் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீரும் ஒருவர். ஆண்ட்ரே ரசலை முன்வரிசையில் இறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த கம்பீர், ரசலுக்கு எந்த பவுலர் இந்த சீசனில் சவாலாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர், ஆண்ட்ரே ரசலுக்கு பும்ரா தான் பெரும் தொந்தரவாக இருப்பார். பும்ராவை தவிர வேறு யாராலும் ரசலுக்கு தொல்லையளிக்க முடியாது என கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. பும்ராவால் ரசலின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றாலும் கூட, தனது வெரைட்டியான மற்றும் துல்லியமான பவுலிங்கால், ஆண்ட்ரே ரசலை பெரிய ஷாட்டுகளை அடித்து ஸ்கோர் செய்யமுடியாமல் கட்டுப்படுத்த முடியும். ஆண்ட்ரே ரசல் டெத் ஓவர்களில் களத்தில் இருந்தாலும் கூட, கம்பீர் சொன்னதை போல ரசலை நிராயுதபாணியாக நிற்கவைக்க பும்ராவால் முடியும்.
 

click me!