டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஓனராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர்..?

By karthikeyan VFirst Published Dec 6, 2019, 3:36 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியின் 10% பங்கை கவுதம் கம்பீர் வாங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தற்போது டெல்லி கிழக்கு தொகுதியின் எம்பி-யாக உள்ளார். 2007ல் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றபோதும், 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும் முக்கியமான பங்காற்றியவர் கவுதம் கம்பீர். 

ஐபிஎல்லில் 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மூன்று சீசன்கள் டெல்லி அணியில் ஆடிய கம்பீர், அதன்பின்னர் 2011 முதல் 2017 வரை கேகேஆர் அணியில் ஆடினார். கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்து இரண்டு முறை அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர். ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா, தோனிக்கு அடுத்த வெற்றிகரமான கேப்டன் கம்பீர் தான். 

கம்பீர் 2018 ஐபிஎல்லில் டெல்லி அணியில் ஆடினார். அந்த அணியின் கேப்டனாக இருந்த அவரும் சரியாக ஆடவில்லை. டெல்லி அணியும் தொடர் தோல்விகளை தழுவியது. இதையடுத்து கம்பீர் ஓரங்கட்டப்பட்டு சீசனின் பாதியில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக்கப்பட்டார். அத்துடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்றார் கம்பீர். 

இதையடுத்து அரசியலில் அதிரடியாக குதித்த கம்பீர், டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியும் ஆனார். இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் 10% பங்கை கம்பீர் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் 50% பங்கு ஜி.எம்.ஆர் குரூப்பிடமும் மீதம் 50% பங்கு ஜே.எஸ்.டபிள்யூ குரூப்பிடமும் உள்ளது. இதில் ஜி.எம்.ஆர் குரூப்பிடம் இருக்கும் 50 சதவிகிதத்தில் இருந்து 10% பங்கை மட்டும் கம்பீர் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.100 கோடி கொடுத்து 10% பங்கை வாங்கவிருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் நிர்வாகக்குழுவின் அனுமதிக்காகத்தான் கம்பீர் காத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 
 

click me!