
2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. டி20 அணிக்கும் ஒருநாள் அணிக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க முடியாது; வெள்ளைப்பந்து அணிகளை ஒரே கேப்டன் வழிநடத்துவதுதான் அணிக்கு நல்லது என்று கூறி விராட் கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவையே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.
எனவே விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் இருந்த நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக அவர் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் யாருமே எதிர்பார்த்திராத விதமாக திடீரென டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி.
இது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் பல வெற்றிகளை குவித்த சாதனைக்கு சொந்தக்காரர்.
இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே கருத்து கூறியிருந்தார். விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் கோலி - கங்குலி ஆகியோரின் முரண்பட்ட கருத்து அவர்களுக்கிடையே மோதல் என்ற பேச்சுக்கு வழிவகுத்த நிலையில், கோலி வலுக்கட்டாயமாக டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கடந்த ஐபிஎல்லின்போது கோலி டெஸ்ட் கேப்டன்சியில் நீடிப்பதற்காக வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியிலிருந்து விலக முடிவு செய்ததாக கூறியதாகவும், டெஸ்ட் கேப்டன்சியில் நீடிக்க விரும்பிய அவர், திடீரென விலகியது பெரும் அதிர்ச்சியளித்ததாகவும் தெரிவித்தார் பாண்டிங்.
பாண்டிங்கின் இந்த கருத்து, அக்தரின் கருத்துக்கு உரமிடுவதாக அமைந்தது. பாண்டிங்கின் கருத்து இண்டர்நெட்டையும் பரபரப்பாக்கியுள்ளது. கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்; அதற்கு கங்குலி தான் காரணம் என்ற வகையில், பிசிசிஐ தலைவர் கங்குலியை சரமாரியாக விளாசிவருகின்றனர் ரசிகர்கள்.
கங்குலி இந்திய கிரிக்கெட்டை சீரழிக்கிறார், கங்குலியை பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்பன போன்ற டுவீட்டுகளை ரசிகர்கள் தெறிக்கவிடுகின்றனர்.