சர்வதேச கிரிக்கெட்டின் நம்பர் 1 கேப்டன் மோர்கன்..! தோனியின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த இயன் மோர்கன்

By karthikeyan VFirst Published Aug 5, 2020, 6:09 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்.
 

இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், அந்த அணியின் ஆல்டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவர். இங்கிலாந்து அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவரது சிறப்பான பங்களிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2015 உலக கோப்பை முடிந்த மாத்திரத்திலேயே, 2019 உலக கோப்பைக்கான வலுவான இங்கிலாந்து அணியை கட்டமைக்கும் பணியை தொடங்கிய இயன் மோர்கன், அதை செய்தும் காட்டினார். 

மிகச்சிறந்த வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான ஆக்ரோஷமும் வெற்றி வேட்கையும் கொண்ட மிகச்சிறந்த அணியை உருவாக்கி, 2019ல் உலக கோப்பையை வென்றும் காட்டினார். 

இங்கிலாந்து அணியின் பல்லாண்டுகால உலக கோப்பை கனவை நனவாக்கியவர் இயன் மோர்கன். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளார் இயன் மோர்கன். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 328 ரன்கள் அடித்தது. 329 ரன்கள் என்ற இலக்கை விரட்டி அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இயன் மோர்கன் 84 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 106 ரன்களை விளாசினார். இந்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம்  328 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதில் கேப்டனாக 215 சிக்ஸர்களை விளாசியுள்ள இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த கேப்டன் என்ற சாதனையை இயன் மோர்கன் படைத்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 211 சிக்ஸர்களை விளாசியுள்ளார். மோர்கன், ஏற்கனவே தோனியை சமன் செய்துவிட்ட நிலையில், அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களுடன் சேர்த்து, கேப்டனாக 215 சிக்ஸர்களை விளாசி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் மோர்கன். 

மோர்கனுக்கு அடுத்த இடத்தில் தோனி இருக்கிறார். 171 சிக்ஸர்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாமிடத்திலும் 170 சிக்ஸர்களுடன் பிரண்டன் மெக்கல்லம் நான்காமிடத்திலும் உள்ளனர். 
 

click me!