இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான்..! முக்கியமான தலைகளை ஆரம்பத்துலயே தட்டி தூக்கிய பாக்., பவுலர்கள்

By karthikeyan VFirst Published Aug 6, 2020, 11:53 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பவுலர்கள் அருமையாக பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்டையெல்லாம் சீக்கிரமாக வீழ்த்தி அசத்தினர். 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை அடித்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத்தின் அபாரமான சதத்தால் தான் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டியது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரமிட்டு அபாரமாக ஆடிய ஷான் மசூத் 156 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். பாபர் அசாம் 69 ரன்களையும் ஷதாப் கான் 46 ரன்களையும் அடித்தனர். வேறு எந்த வீரருமே இரட்டை இலக்க ஸ்கோரைக்கூட அடிக்கவில்லை. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை அளித்தனர் பாகிஸ்தான் பவுலர்கள். தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரிலேயே வெறும் 4 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார் ஷாஹீன் அஃப்ரிடி. முகமது அப்பாஸ் வீசிய இன்னிங்ஸின் 4வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் சிப்ளி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸும் கேப்டன் ஜோ ரூட்டும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த ஜோடி அதை செய்ய தவறியது. அதிகப்பிரசங்கித்தனமாக, கிரீஸை விட்டு 2-3 ஸ்டெப் இறங்கி நின்று பேட்டிங் ஆடிய பென் ஸ்டோக்ஸின் மூக்கை உடைத்தார் முகமது அப்பாஸ். அப்பாஸ் ஸ்டம்ப்பை நோக்கி வீசிய துல்லியமான பந்தை தவறவிட்டு ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் ஸ்டோக்ஸ். அதன்பின்னர் கேப்டன் ஜோ ரூட்டும் 14 ரன்களில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஓலி போப்பும் ஜோஸ் பட்லரும் ஜோடி சேர்ந்தனர். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய ஓலி போப், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 67 பந்தில் 46 ரன்களை அடித்துள்ளார். இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்துள்ளது. 

பாகிஸ்தான் பவுலர்கள் முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, யாசிர் ஷா ஆகியோர் இங்கிலாந்து அணி சற்றும் எதிர்பார்த்திராத வகையில் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களை விரைவிலேயே வீழ்த்தி மிரட்டினர்.
 

click me!