ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு பிறகு மளமளவென சரிந்த இங்கிலாந்து அணி

By karthikeyan VFirst Published Aug 3, 2019, 5:56 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் மூன்றாம் நாள் ஆட்டத்தை பர்ன்ஸும் ஸ்டோக்ஸும் தொடர்ந்த நிலையில், ஸ்டோக்ஸின் விக்கெட் விழுந்த பிறகு இங்கிலாந்து அணி மளமளவென அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது. 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியின் 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்திருந்தது. 

சதமடித்து 125 ரன்களுடன் களத்தில் இருந்த பர்ன்ஸ் மற்றும் 38 ரன்களுடன் நின்ற ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இன்றைய ஆட்டத்தில் 12 ரன்கள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்த ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பர்ன்ஸ் - ஸ்டோக்ஸ் ஜோடியை கம்மின்ஸ் பிரித்து பிரேக் கொடுத்தார். அதன்பின்னர் பர்ன்ஸ் 133 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த மொயின் அலி டக் அவுட்டாகி வெளியேறினார். பேர்ஸ்டோவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸின் விக்கெட்டுக்கு பிறகு, பர்ன்ஸ், மொயின் அலி, பேர்ஸ்டோ என இங்கிலாந்து அணியின் பின்வரிசை பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 

300 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கிறிஸ் வோக்ஸும் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து ஆடிவருகின்றனர். 
 

click me!