ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் எடுத்தாலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனுக்கும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் இந்திய அணி தோல்வியைத் தழுவ நேரிட்டது. இந்திய அணிக்காக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை.
172 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. சஞ்சு சாம்சன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா வேகமாக ஆரம்பித்தார், ஆனால் அவரும் 24 ரன்களில் கார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் சொதப்பி 14 ரன்களுக்கு வெளியேறினார். கடந்த போட்டியின் நாயகன் திலக் வர்மாவும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா இறுதிவரை களத்தில் இருந்து 40 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி வெற்றி:
ஆனால், ஹர்திக்கின் மெதுவான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை. வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள், அக்சர் படேல் 15 ரன்கள், துருவ் ஜூரல் 2 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பிராண்டன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட், அடில் ரஷித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி, இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் வாய்ப்பை உயிர்ப்பித்தனர்.
முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று இங்கிலாந்து அணியை பேட்டிங்கிற்கு அழைத்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் மோசமான தொடக்கத்தை அளித்தனர். இரண்டாவது ஓவரிலேயே பில் சால்ட் 5 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அதன் பிறகு கேப்டன் பட்லர் மற்றும் பென் டக்கெட் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மிரட்டிய வருண் சக்கரவர்த்தி:
ஆனால், ஜோஸ் பட்லர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும், சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த டக்கெட்டும் 51 ரன்களில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு, விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன. லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்கள் எடுத்தார். ஆனால் இறுதியில் அவரும் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா மற்றும் சென்னை போட்டிகளில் செய்தது போலவே, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய முகமது ஷமி 3 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்தார். அவர் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை என்றாலும், இங்கிலாந்து அணிக்கு சவாலாக இருந்தார்.
வருண் சக்கரவர்த்தி தனது சுழல் மாயாஜாலத்தை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், சிறப்பாக பந்துவீசி எதிரணியைத் திணறடித்த வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.