இரட்டை சதத்தை தவறவிட்ட பென் ஸ்டோக்ஸ்..! 469 ரன்களுக்கு இங்கிலாந்து டிக்ளேர்

By karthikeyan VFirst Published Jul 17, 2020, 10:44 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸை 469 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸ் 15 ரன்களிலும், ஜாக் கிராவ்லி ரன்னே அடிக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 81 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 

தொடக்க வீரர் சிப்ளி சிறப்பாக ஆட, நான்காவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், சிறப்பாக ஆடினார். சிப்ளியும் ஸ்டோக்ஸும் இணைந்து நான்காவது  விக்கெட்டுக்கு 260 ரன்களை குவித்தனர். இருவரும் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தனர். வெகுசிறப்பாக ஆடி, தனது 2வது டெஸ்ட் சதத்தை விளாசினார் சிப்ளி. 

முக்கியமான நேரத்தில் சிறப்பான இன்னிங்ஸை ஆடிய சிப்ளி, 120 ரன்களில் ரோஸ்டான் சேஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ஸ்டோக்ஸ், சதத்திற்கு பின்னர் அடித்து ஆடினார். ரொம்ப மந்தமாக ஆடாமல், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்த ஸ்டோக்ஸ், இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டி பிரேக்கிற்கு பின் களத்திற்கு வந்ததும் 176 ரன்களில் ஆட்டமிழந்தார். வெஸ்ட்  இண்டீஸ் பவுலர்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், இரட்டை சதமடிக்கும் அருமையான வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். சாம் கரன் 17 ரன்களிலும் பட்லர் 40 ரன்களிலும் ஆட்டமிழக்க, டோமினிக் பெஸ்ஸுடன் கடைசி விக்கெட்டுக்கு பிராட் ஜோடி சேர்ந்தார். டோமினிக் பெஸ் அடித்து ஆடி 26 பந்தில் 31 ரன்கள் அடித்தார். பிராட் 11 ரன்கள் அடித்தார். இருவரும் களத்தில் இருந்த நிலையில், 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. 
 

click me!