நியூசிலாந்தை சொந்த மண்ணில் வதம் செய்தது இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Nov 1, 2019, 10:43 AM IST
Highlights

நியூசிலாந்து-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி மிரட்ட வேண்டுமெனில் மார்டின் கப்டில் அபாரமாக ஆடியாக வேண்டும். அதிரடி வீரரான கப்டில் இன்னும் ஃபார்முக்கு திரும்பாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. கப்டில் 2 ரன்னில் அவுட்டாக, முன்ரோவும் 21 ரன்களில் நடையை கட்டினார். அதன்பின்னர் டிம் சேஃபெர்ட்(32), ரோஸ் டெய்லர்(44), டேரைல் மிட்செல்(30) ஆகியோர் இணைந்து 153 ரன்களை எட்ட உதவினர். 

154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க டேவிட் மாலன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 28 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். ஜேம்ஸ் வின்ஸ் பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து வின்ஸ் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் இயன் மோர்கனும் சாம் பில்லிங்ஸும் இணைந்து இலக்கை 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். 

ஆட்டநாயகனாக ஜேம்ஸ் வின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 

click me!