சீட்டுக்கட்டு போல் சரிந்த ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டர்..! இங்கிலாந்து அபார வெற்றி.. ஆட்டநாயகன் ஆர்ச்சர்

By karthikeyan VFirst Published Sep 14, 2020, 10:14 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும் ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 7 பந்தில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான வேகத்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார்.  நல்ல டச்சில் சிறப்பாக தொடங்கிய ஜேசன் ராய் 4 பவுண்டரிகளுடன் 22 பந்தில் 21 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 7வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் ஜோ ரூட்டுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ஃபார்மில் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ரூட், ஒருநாள் போட்டிகளிலும் சொதப்புகிறார். முதல் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடினார். 73 பந்துகளை எதிர்கொண்ட போதிலும், கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், வெறும் 39 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.

அதன்பின்னர் பட்லர் 3 ரன்களிலும் கேப்டன் மோர்கன் 42 ரன்களிலும், கடந்த போட்டியில் சதமடித்த சாம் பில்லிங்ஸ் வெறும் 8 ரன்னிலும், சாம் கரன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 38 ஓவரில் வெறும் 143 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த கிறிஸ் வோக்ஸும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

40 ஓவரில் வெறும் 149 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களையாவது எட்டுமா என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை, கடைசி 10 ஓவரில் அடில் ரஷீத் மற்றும் டாம் கரன் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 82 ரன்களை குவித்ததால், 231 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்தது இங்கிலாந்து. டாம் கரன் 39 பந்தில் 37 ரன்களும் அடில் ரஷீத் 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தார். அடில் ரஷீத்தின் அதிரடியால் தான் 231 ரன்களை அடித்தது இங்கிலாந்து அணி. இல்லையெனில் 200 ரன்களைக்கூட இங்கிலாந்து எட்டியிருக்காது.

இதையடுத்து 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் இந்த போட்டியிலும் சொதப்பினார். வெறும் 6 ரன்னில் ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியிலும் ஸ்மித் ஆடாததால், முதல் போட்டியில் 3ம் வரிசையில் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் தான் இந்த போட்டியிலும் 3ம் வரிசையில் இறங்கினார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்த ஸ்டோய்னிஸை, இந்த போட்டியில் வெறும் 9 ரன்னில் ஆர்ச்சர் வீழ்த்தினார்.

அதன்பின்னர் தொடக்க வீரர் ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க உதவினார். செம ஃபார்மில் இருக்கும் ஆரோன் ஃபின்ச், பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மார்னஸ் லபுஷேனும் சிறப்பாக ஆடினார். களத்தில் நிலைத்துவிட்ட லபுஷேனை 48 ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்து அணிக்கு பிரேக் கொடுத்தார் கிறிஸ் வோக்ஸ். 3வது விக்கெட்டுக்கு ஃபின்ச்சும் லபுஷேனும் இணைந்து 107 ரன்களை சேர்த்தனர்.

லபுஷேன் அவுட்டான, அடுத்த 2 ஓவர்களில் முறையே மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னிலும் ஃபின்ச் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் கம்மின்ஸ் 11 ரன்னிலும் ஸ்டார்க் ரன்னே அடிக்காமலும் ஸாம்பா 2 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

31வது ஓவரில் அணியின் ஸ்கோர் 144 ரன்களாக இருந்தபோது லபுஷேன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 19 ஓவரில் 88 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் மிடில் மற்றும் பின்வரிசை பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டை போல் சரிந்து 48.4 ஓவரில் 207 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஒருமுனையில் அலெக்ஸ் கேரி மட்டும் களத்தில் நிலைத்து நின்றும் கூட, அவருக்கு மறுமுனையில் ஆதரவு கிடைக்காததால், இலக்கை எட்டமுடியவில்லை. 232 ரன்கள் என்ற எளிய இலக்கைக்கூட அடிக்கமுடியாமல் 207 ரன்களுக்கே சுருண்டு 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது. வார்னர், ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய 3 முக்கிய வீரர்களையும் ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்ச்சர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

click me!