#ENGvsIND முதல் டெஸ்ட்: பும்ரா, ஷமி அபாரம்.. இங்கிலாந்தை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய இந்தியா

By karthikeyan VFirst Published Aug 4, 2021, 10:09 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாட்டிங்காமில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி ஷமி, பும்ரா, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர் ஜடேஜா என 5 பவுலர்களுடன் களமிறங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. இதையடுத்து சிப்ளியுடன் ஜோடி சேர்ந்து ஜாக் க்ராவ்லி, அருமையாக ஆடினார். 

சிப்ளியும் க்ராவ்லியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 42 ரன்களை சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்காக இந்திய அணி காத்திருந்த நிலையில், க்ராவ்லியை 27 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சிராஜ்.

முதல் செசன் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது செசனில் தொடக்க வீரர் சிப்ளியை 18 ரன்னில் வீழ்த்தி, தனது விக்கெட் கணக்கை தொடங்கினார் ஷமி. அதன்பின்னர் பேர்ஸ்டோவை 29 ரன்னிலும், லாரன்ஸை ரன்னே அடிக்கவிடாமலும் வீழ்த்திய ஷமி தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை சரித்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அரைசதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை 64 ரன்களுக்கு வீழ்த்திய ஷர்துல் தாகூர், ஆலி ராபின்சனை டக் அவுட்டாக்கி அனுப்பினார். இதையடுத்து கடைசி 2 வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரையும் பும்ரா ஒற்றை இலக்கத்தில் வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
 

click me!