அதிகமான டி20 டைட்டிலை வென்ற வீரர்..! பொல்லார்டின் ரெக்கார்டை தகர்த்து முதலிடம் பிடித்த பிராவோ

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 11:08 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் அதிகமான டைட்டில்களை வென்ற கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸின் ட்வைன் பிராவோ படைத்துள்ளார்.
 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், தென்னாப்பிரிக்காவில் மசான்ஸி சூப்பர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக், கனடாவில் கனடா பிரீமியர் லீக், வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

கிட்டத்தட்ட இந்த அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடுபவர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸின் ட்வைன் பிராவோ மற்றும் கைரன் பொல்லார்டு ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து, வெஸ்ட் இண்டீஸுக்காக ஆடுவது மட்டுமல்லாது, உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகின்றனர்.

டி20 கிரிக்கெட்டில் அபரிமிதமான அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் இருவரும் ஐபிஎல்லில் ஆடும் அணிகள் தான் சாம்பியன் அணிகள். பிராவோ சிஎஸ்கேவிலும், பொல்லார்டு மும்பை இந்தியன்ஸிலும் ஆடுகின்றனர். இந்த 2 அணிகள் தான் ஐபிஎல்லில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகள். பொல்லார்டு ஆடும் மும்பை அணி ஐபிஎல்லில் 5 முறையும், பிராவோ ஆடும் சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல் 14வது சீசனில் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியில் ஆடும் பிராவோவிற்கு இது 16வது டி20 டைட்டில். இதன்மூலம், அதிகமான டி20 டைட்டில்களை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ட்வைன் பிராவோ.

15 டி20 டைட்டில்களுடன் பொல்லார்டுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டிருந்த பிராவோ, சிஎஸ்கே அணியின் வெற்றியின் மூலம் 16 டைட்டில்களுடன் பொல்லார்டை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
 

click me!