குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஷஷாங்க் சிங் அதிரடியால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பின்னர், 200 ரன்களை இலக்காக கொண்ட பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவருக்கு பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 117 ரன்கள் தேவைப்பட்டது. சிக்கந்தர் ராசா 15, ஜித்தேஷ் சர்மா 16 ரன்கள் எடுத்துக் கொடுத்தன்ர. இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 31 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் பெயர் மாற்றத்தால் தவறுதலாக அடிப்படை விலை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 61 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
ஒரே ஒரு போட்டியில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். எனினும், ஏலத்தின் போது ஷஷாங்க் சிங் என்ற பெயரானது பல சர்ச்சைனைகளை வழிவகுத்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடந்த ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா ஆகியோர் இந்திய வீரர் ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்த போது குழப்பம் அடைந்தனர்.
உண்மையில் அவரை ஏலம் எடுக்க விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரானது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஏலத்தில் விழுந்துவிட்டது. அதன் பிறகு ஷஷாங்க் சிங்கை தங்களது அணிக்கு வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. மேலும், ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதற்கு முடிவு செய்திருந்ததாகவும், ஒரே பெயரில் 2 வீரர்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் பதிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகவும், வெற்றிக்கு அவரது பங்களிப்பைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பதிவிட்டுள்ளது.
யார் இந்த ஷஷாங்க் சிங்?
கடந்த 1991 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள டர்க் மாவட்டத்தில் பிலாய் என்ற பகுதியில் பிறந்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலரான ஷஷாங்க் சிங், 2015 -16 ஆம் ஆண்டுகளில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை.
இதையடுத்து 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு 2018 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ.30 லட்சத்திற்கு இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20 லட்சத்திற்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ஷஷாங்க் சிங் 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 25* ரன்கள் சேர்த்தார். பவுலிங்கிலும் 10 போட்டிகளில் 2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்தார்.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த தொடரில் இதுவரையில் பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக பஞ்சாப் அணிக்காக முதல் போட்டியில் அறிமுகமான ஷஷாங்க் சிங் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் 58 டி20 போட்டிகளில் விளையாடிய ஷஷாங்க் சிங் 754 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான ஷஷாங்க் சிங் இந்திய அணியிலும் இடம் பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.