நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பா டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை

By karthikeyan VFirst Published Apr 16, 2020, 8:48 PM IST
Highlights
இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் 15 ஆண்டுகளாக தவித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளார்.
 
2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.



எனவே இந்திய அணியில் தோனியை போலவே ஒரு ஃபினிஷர் என்கிற அளவில் பாராட்டை பெற்ற தினேஷ் கார்த்திக், அதன்பின்னர் ஆசிய கோப்பை உள்ளிட்ட சில தொடர்களில் இடம்பெற்றார். நிதாஹஸ் டிராபியில் அவர் ஆடிய அதிரடி பேட்டிங் - அனுபவமான விக்கெட் கீப்பர் என்ற இரண்டு விஷயங்களும் இணைந்து 2019ல் நடந்த ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடத்தை பெற்று கொடுத்தது. 

ஆனால் வழக்கம்போலவே அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாத தினேஷ் கார்த்திக், மீண்டும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை இழந்ததால், இந்திய அணியில் இடத்தையும் இழந்தார். உலக கோப்பைக்கு பின்னர் டி20 அணியில் கூட இடம்பெறாத தினேஷ் கார்த்திக், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார்.



ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேசியுள்ள தினேஷ் கார்த்திக், டி20 கிரிக்கெட்டில் எனது ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கான அணியில் இடம்பெறுவதுதான் நோக்கம். ஒருநாள் உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை. ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான அணியில் எனக்கான வாய்ப்பை பெற முடியும் என்று நம்புகிறேன்.

உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் இடம்கிடைக்காதது, கஷ்டமாகத்தான் இருந்தது. எனது நாட்டுக்காக என்னால் தொடர்ந்து ஆடமுடியாதது வருத்தம்தான். ஆனாலும் எனது கெரியரில் இது புதிதல்ல. என் கெரியர் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. என் கெரியரிலிருந்து நான் நிறைய பாடங்களை கற்றிருக்கிறேன். ஆனாலும் தளரவில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கையுள்ளது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 
click me!