சூடுபிடிக்கும் ஐபிஎல்: முதல் ஆளாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் தோனி..! மீண்டும் களம் காண தயாரான தல

By karthikeyan VFirst Published Jul 25, 2020, 3:35 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் நிலையில், மற்ற அணிகளுக்கு முன்பாகவே சிஎஸ்கே அணி அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் அட்டவணை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 29ம் தேதி ஐபிஎல்லும், வரும் அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பையும் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதற்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடிராத தோனி, ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் ஐபிஎல் தள்ளிப்போனது. 

ஐபிஎல்லை திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி தொடங்க முடியவில்லை. கொரோனா பரவல் அதிகமானதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, ஐபிஎல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்தது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அனைத்து அணிகளும் அதற்காக தயாரிப்பு பணியில் இறங்கிவிட்டனர். வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருப்பதாக கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது. அங்குள்ள கண்டிஷன்களை ஆராய்ந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப தயாராக்கும் விதமாக, மற்ற அணிகளுக்கு முன்பாகவே சிஎஸ்கே அங்கு செல்கிறது. 

மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில்தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளன. ஆனால் சிஎஸ்கே ஒரு வாரத்திற்கு முன்பாகவே செல்கிறது. ஐபிஎல் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், தோனி தான் முதல் ஆளாக சென்னை சேப்பாக்கத்தில் இறங்கி பயிற்சியை தொடங்கினார். 
 

click me!