அதெல்லாம் என் பிரச்னை இல்லங்க.. செம கெத்தா பேசும் தவான்

By karthikeyan VFirst Published Jan 12, 2020, 5:11 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஆடும் லெவனில் இடம்பெறும் பேட்டிங், பவுலிங் காம்பினேஷனில் கவனம் செலுத்திவருகிறது. 
 

டி20 உலக கோப்பைக்கான பெஸ்ட் 11 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்வதற்காக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. கேஎல் ராகுல் கடந்த சில தொடர்களில் அபாரமாக ஆடியதுடன், டாப் ஃபார்மில் இருப்பதால் அவரைத்தான் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. 

ரோஹித் சர்மா -  ஷிகர் தவான் தொடக்க ஜோடி, இந்திய அணிக்காக பல சிறப்பான தொடக்கங்களை அமைத்து கொடுத்து, அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான ஜோடி தான். ஆனால் தவான் அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால், உலக கோப்பையில் பாதியில் வெளியேறினார். 

அதன்பின்னர் சிகிச்சையில் இருந்த அவர், காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவதற்குள், அதற்கிடையே தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினார் கேஎல் ராகுல். காயத்திலிருந்து மீண்டு வந்த தவான், மீண்டும் அணியில் இடம்பிடித்தாலும், அவர் சரியாக ஆடவில்லை. மந்தமாகவும் பந்துக்கு நிகராக ரன் அடித்து படுமோசமாகவும் ஆடினார். சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியபோது மீண்டும் காயமடைந்தார் தவான். ஏற்கனவே மோசமாக ஆடி, அணியில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இடத்தை இழந்துவந்த தவானுக்கு, இந்த காயம் பெருத்த ஆப்பாக அமைந்தது. 

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களில் ராகுல் அபாரமாக ஆடி தன்னை ஓரங்கட்டமுடியாதபடி செய்தார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ராகுல் அதிரடியாக ஆட, தவான் அந்த போட்டியில், சூழலுக்கு ஏற்ப ஆடினார். ராகுல் அடித்து ஆட, தவான் அவருக்கு சிங்கிள் தட்டிக்கொடுக்கும் பணியை மட்டும் செய்தார். அதனால் அந்த இன்னிங்ஸும் மந்தமாக அமைந்தது. இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆரம்பத்தில் ராகுலைவிட தவான் அதிரடியாக ஆடினார். ஆனால் இறுதியில் தவானைவிட ராகுலின் ஸ்டிரைக் ரேட் தான் அதிகம். தவான் 36 பந்தில் 52 ரன்களையும், அதே 36 பந்தில் ராகுல் 54 ரன்களையும் அடித்தார். 

எனவே ராகுலுக்கும் தவானுக்கும் இடையிலான தொடக்க வீரருக்கான போட்டியில், தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் ராகுல்தான் முன்னணியில் இருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய தவான், ரோஹித்துக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்தது. ராகுலும் அண்மைக்காலமாக அபாரமாக ஆடிவருகிறார். ராகுல் திறமையான மற்றும் அபாரமான பேட்ஸ்மேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை நானும் சிறப்பாகவே பயன்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். நான் அணியில் இருப்பேனா இல்லையா, என்னை எடுப்பார்களா மாட்டார்களா என்பதெல்லாம் என் பிரச்னையில்லை. என் கையில் எதுவுமில்லை என்பதால் அதை பற்றியெல்லாம் நான் யோசிப்பதேயில்லை என்று கூலாக பேசியுள்ளார் தவான். 
 

click me!