பிசிசிஐ-யின் எதிர்ப்பை மீறி புதிய தொடரை நடத்தும் ஐசிசி.. எப்படி எதிர்கொள்ளப்போகிறார் தாதா..?

By karthikeyan VFirst Published Oct 15, 2019, 4:21 PM IST
Highlights

ஒவ்வொரு ஆண்டும் டி20 உலக கோப்பையை நடத்துவது மற்றும் கூடுதலாக ஒரு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது ஆகிய ஐசிசியின் திட்டங்களை பிசிசிஐ கடுமையாக எதிர்த்துள்ளது. 
 

ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. அதில், 2023ம் ஆண்டு முதல் 2031ம் ஆண்டு வரை நடத்தப்பட வேண்டிய ஐசிசி தொடர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு ஆண்டும் டி20 உலக கோப்பை நடத்துவது மற்றும் 6 அணிகள் மட்டுமே பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டது. 

அவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் டி20 உலக கோப்பையை நடத்துவது, பிசிசிஐயின் வருவாயை பாதிக்கும் செயல் என்று கருதும் பிசிசிஐ, ஐசிசியின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலகிலேயே பணப்புழக்கம் அதிகமுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ தான். ஒவ்வொரு ஆண்டும் டி20 உலக கோப்பையை நடத்துவதன் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டி ஒளிபரப்பாளர்களிடமிருந்து வருவாயை பகிர்ந்துகொள்ள ஐசிசி திட்டமிடுகிறது என்பது பிசிசிஐயின் குற்றச்சாட்டு. 

2023 முதல் 2028 வரையிலான காலக்கட்டத்தில் உலகளாவிய ஊடக உரிமை சந்தையில் பிசிசிஐக்கு போட்டியை ஏற்படுத்தும் முனைப்பில் ஐசிசி செயல்படுவதாகவும் பிசிசிஐ குற்றம்சாட்டுகிறது. மேலும் 2023ம் ஆண்டு நடத்தப்படும் ஐசிசி தொடர்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஐசிசி தொடர்கள் ஆகியவற்றை ஒப்புக்கொள்ளவோ அவற்றிற்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே, அவர் கையாள வேண்டிய மிகப்பெரிய பிரச்னை வந்துள்ளது. இதை கங்குலி தலைமையிலான பிசிசிஐயின் புதிய நிர்வாகிகள் தான் கையாள வேண்டும். கங்குலி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!