அவரு என்ன முடிவு வேணா எடுக்கட்டும்.. எங்க முடிவு இதுதான்.. டிராவிட் விவகாரத்தில் சிஓஏ அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Aug 15, 2019, 12:21 PM IST
Highlights

ராகுல் டிராவிட் மீதான ஆதாயம் தரும் இரட்டை பதவி விவகாரத்தில் கிரிக்கெட் நிர்வாகக்குழு தங்கள் முடிவை தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுயநலமற்ற வீரருமான ராகுல் டிராவிட், இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தவர். 

தனது நிலையான பேட்டிங்கின் காரணமாக இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்படுபவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்து வருபவர். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து, பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்துவருகிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில், மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர் சஞ்சய் குப்தாவின் புகாரை ஏற்று, பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருக்கும் ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கிறார். எனவே டிராவிட், இரட்டை ஆதாயம் தரும் பதவிகளில் இருப்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஞ்சய் குப்தா பிசிசிஐ-யிடம் புகார் அளித்தார். 

அதை ஏற்றுக்கொண்டு, டிராவிட் இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி டி.கே.ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கங்குலி, ஹர்பஜன் சிங், கும்ப்ளே ஆகிய முன்னாள் வீரர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில், டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார்கள் எதுவும் இல்லை என பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி ஜெயின் தான் எடுக்க வேண்டும். 

இதுகுறித்து பேசிய சிஓஏ அதிகாரி தோக்டே, ராகுல் டிராவிட் விவகாரத்தில் இரட்டை பதவி புகார் எதுவும் இல்லை. ஆனால் இதுகுறித்து ஜெயின் தான் முடிவெடுக்க வேண்டும். எங்களை கேட்டால், டிராவிட்டுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டோம் என்று தெரிவிப்போம். தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிராவிட் பணியமர்த்தப்பட்டபோது, தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் டிராவிட் அமர்த்தப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுமுறைக்கு டிராவிட் இந்தியா சிமெண்ட்ஸிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகாடமியை சர்வதேச தரத்துக்கு உயர்த்த டிராவிட்டுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளோம். அவரும் தன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று தோட்கே தெரிவித்துள்ளார்.
 

click me!