நீ கவலைப்படாதடா தம்பி.. நாங்க இருக்கோம்.. இளம் வீரருக்கு நம்பிக்கையளித்த கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Dec 5, 2019, 4:07 PM IST
Highlights

ரிஷப் பண்ட் ஃபார்முக்கு திரும்பும்வரை அவருக்கு அணி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி உறுதியளித்துள்ளார். 
 

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கெரியர் முடிந்துவிட்டது. தோனிக்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. 

ஐபிஎல்லில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட பின்னர், சரியாக ஆடவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சொதப்புகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் ஏமாற்றமளித்தார் 

இதையடுத்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால், அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த அழுத்தத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல், நெருக்கடிக்கு உட்படாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டிய ரிஷப் பண்ட், அந்த அழுத்தத்தை எல்லாம் மண்டைக்கு ஏற்றிக்கொண்டு சரியாக ஆடாமல் திணறிவருகிறார். தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுவதா அல்லது சூழலுக்கு ஏற்ப அணிக்காக ஆடுவதா என்ற குழப்ப மனநிலையோடு அணுகுவதால், அவரால் சோபிக்கமுடியாமல் போகிறது. 

அவர் சரியாக ஆடாவிட்டாலும், மீண்டும் ஃபார்முக்கு திரும்பும்வரை போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை ஹைதராபாத்தில் நடக்கவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட்டுக்கு அணி நிர்வாகம் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். 

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட்டின் திறமை மீது நாங்கள்(அணி நிர்வாகம்) மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். கிடைத்த வாய்ப்பில் நன்றாக ஆடி தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது வீரரின் கடமை. இருந்தாலும் அவருக்கு ஆதரவாக இருந்து அவருக்கான சுதந்திரத்தையும் வாய்ப்பையும் அளிக்க வேண்டியது நமது கடமை. அவருக்கான ஆதரவை அளிக்காவிட்டால் அது அவமரியாதை செய்வதாக இருக்கும். 

அண்மையில் ரோஹித் சர்மா சொன்னதுபோல, அவருக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் தனியாகவும் சுதந்திரமாகவும் விடவேண்டும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால், அதன்பின்னர் அவரது வேற லெவல் வெர்சனை பார்க்கமுடியும். அவரை தனிமைப்படுத்தக்கூடாது. அவருக்கு ஆதரவளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். 
 

click me!