உடற்தகுதியை நிரூபித்தால்தான் நீங்க ஆடமுடியும் பும்ரா.. மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த பும்ராவுக்கு அதிரடி உத்தரவு

By karthikeyan VFirst Published Dec 24, 2019, 4:28 PM IST
Highlights

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த பவுலர்களில் ஒருவருமாக திகழ்கிறார் பும்ரா. 
 

பும்ராவின் வருகைக்கு பிறகு தான் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் முகமே மாறியது. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், நல்ல வேகம், துல்லியமான லைன் அண்ட் லெந்த் என மிரட்டலான பவுலராக வலம்வரும் பும்ரா, டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர். பல இக்கட்டான சூழல்களில் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தவர். 

உலக கோப்பைக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பும்ரா, அதன்பின்னர் காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் அண்மையில் நடந்த வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் ஆடவில்லை. 

கடந்த 3 மாதங்களாக சிகிச்சையும் பயிற்சியும் எடுத்துவந்த பும்ரா, சமீபத்தில் கடும் சிக்கலில் சிக்கினார். அதாவது இந்திய அணியில் இடம்பெறும் எந்த வீரராக இருந்தாலும் சரி, காயத்தால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய வீரர்களாக இருந்தாலும் சரி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, அங்கிருந்து உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும்.

ஆனால் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள், உடற்தகுதி நிபுணர்கள் ஆகியோரை நியமித்து பயிற்சியெடுத்த பும்ராவை, என்சிஏ-வில் இணைந்து பயிற்சி பெற்று உடற்தகுதியை நிரூபித்துவிட்டு சான்றை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஏ அறிவுறுத்தியது. ஆனால் என்சிஏ-வின் சான்றை பெறாமலேயே விசாகப்பட்டினத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் பந்துவீசினார் பும்ரா. 

இதனால் கடுப்பான என்சிஏ நிர்வாகிகள், அவருக்கு உடற்தகுதி பரிசோதனை செய்ய முடியாது என மறுத்துவிட்டனர். என்சிஏ-வில் உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் இணைய முடியும். ஆனால் என்சிஏ பும்ராவிற்கு உடற்தகுதி டெஸ்ட்டே செய்யாத போதிலும், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார். 

இதுவே பெரிய அதிர்ச்சிதான். ஏனெனில் வழிமுறைகளை பின்பற்றாமல் இந்திய அணியில் இடம்பெறுவது என்பது மோசமான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், என்சிஏவின் சான்று பெறாமலேயே பும்ராவால் அணியில் இடம்பிடிக்க முடிகிறது என்றால், இவர்களது குறுக்கீடு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. 

பும்ரா இந்திய அணியில் மீண்டும் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது ரஞ்சி டிராபியில் ஆடி அவரது உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். என்சிஏ-வின் உடற்தகுதி சான்று இல்லாமல் அவரை அணியில் எடுத்துவிட்டு, அணியில் எடுக்கப்பட்ட பின்னர், உடற்தகுதியை நிரூபிக்க ரஞ்சி போட்டியில் ஆட அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதனால் ரஞ்சி போட்டியில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக ஆடவுள்ளார் பும்ரா. 
 

click me!