ஐபிஎல் 2020: இந்த முறை கண்டிப்பா அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. அடித்துக்கூறும் பிரெட் லீ

By karthikeyan VFirst Published Sep 10, 2020, 2:08 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் பிரெட் லீ ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், கடந்த சீசனின் ரன்னர் அப் அணியான சிஎஸ்கேவும் மோதுகின்றன.

முதல் போட்டியிலேயே ஐபிஎல்லின் வெற்றிகரமான 2 அணிகளும் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சீசனில் எந்த அணி டைட்டிலை வெல்ல வாய்ப்புள்ளது என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் பிரெட் லீயும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் கவரேஜுக்காக பிரெட் லீ, மும்பை வந்துள்ளார். மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரெட் லீ, ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துவருகிறார். அந்தவகையில், ரசிகர் ஒருவர் இந்த சீசனில் எந்த அணி டைட்டிலை வெல்லும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரெட் லீ, ஒரு அணியை குறிப்பிட்டு தேர்வு செய்வது கடினம் தான். எனினும் நான் சிஎஸ்கேவை தேர்வு செய்கிறேன். சிஎஸ்கே இந்த சீசனில் டைட்டிலை வெல்ல வாய்ப்புள்ளது என்றார் பிரெட் லீ.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, தோனி தலைமையிலான சிஎஸ்கே. இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற பெருமைக்கு சொந்தக்கார அணியான சிஎஸ்கே, இதுவரை ஆடிய 10 சீசன்களில் 8 முறை இறுதி போட்டிக்கு சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது சிஎஸ்கே. 

இந்நிலையில், இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் சிஎஸ்கே அணி உள்ளது. இதற்கிடையே இந்த சீசனிலிருந்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். ரெய்னா ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கெல்லாம் மாற்று வீரர்களை கூட அறிவிக்காத சிஎஸ்கே, இருக்கும் வீரர்களே போதும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ரெய்னா, ஹர்பஜன் இல்லையென்றாலும், தோனி, ஷேன் வாட்சன், பிராவோ, டுப்ளெசிஸ், ஜடேஜா, கேதர் ஜாதவ், அம்பாதி ராயுடு என பெரும் அனுபவ படையே சிஎஸ்கே அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணி வீரர்கள்:

தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி, கரன் ஷர்மா, முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், நாராயணன் ஜெகதீஷன், மிட்செல் சாண்ட்னெர், மோனுகுமார், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட், சாம் கரன், சாய் கிஷோர்.
 

click me!