சத்தியமா நான் அப்படிலாம் சொல்லவேயில்ல.. நேர்மையா உண்மையை ஒத்துகிட்ட பென் ஸ்டோக்ஸ்

By karthikeyan VFirst Published Jul 31, 2019, 5:42 PM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டியின் கடைசி ஓவரில் வீசப்பட்ட ஓவர்த்ரோ பற்றி ஆண்டர்சன் கூறிய கருத்து குறித்து பென் ஸ்டோக்ஸ் மிகவும் நேர்மையாக பதிலளித்துள்ளார். 

உலக கோப்பை வரலாற்றில் இந்த முறை நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. ஒரு இறுதி போட்டிக்கு இருக்க வேண்டிய அனைத்து பரபரப்புகளும் இருந்தன. போட்டி முடியும் கடைசி நொடி வரை பயங்கர த்ரில்லாக இருந்தது. 

242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். 

நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது. 

அந்த சம்பவம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. இந்த சம்பவத்தின்போது ஸ்டோக்ஸ் அந்த எக்ஸ்ட்ரா ரன் வேண்டாமென்று அம்பயரிடம் தெரிவித்ததாக ஆண்டர்சன் கூறியிருந்தார். ஆனால், தான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று ஸ்டோக்ஸ் நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ், நான் அப்படியா சொன்னேன் என்று நானே யோசித்து பார்த்தேன். ஆனால் மனசாட்சிக்கு துரோகம் இல்லாமல் சொல்கிறேன், நான் அம்பயரிடம் ரன் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. கப்டில் த்ரோவிட்ட பந்து என் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றதும் உடனடியாக, விக்கெட் கீப்பர் டாம் லேதமிடம் மன்னிப்பு கேட்டேன். பின் வில்லியம்சனிடமும் மன்னிப்பு கோரினேன் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!