வரலாற்றில் இடம்பிடித்த பென் ஸ்டோக்ஸ்.. டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இங்கிலாந்து வீரர்

By karthikeyan VFirst Published Jan 7, 2020, 12:48 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 223 ரன்களும் அடித்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் சிப்ளி சிறப்பாக ஆடி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸின் அதிரடியால்தான் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மொத்தமாக 437 முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மிகக்கடினமான இலக்குடன், நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 312 ரன்களும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவை. 

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ், தென்னாப்பிரிக்க வீரர்கள் ஹம்சா, டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், ப்ரிட்டோரியஸ் மற்றும் நோர்ட்ஜே ஆகிய 5 வீரர்களின் கேட்ச்சையும் பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை செய்த 12வது வீரர் பென் ஸ்டோக்ஸ். 

பென் ஸ்டோக்ஸுக்கு முன், ஆஸ்திரேலிய வீரர் விக்டர் யார்க் ரிச்சர்ட்ஸன், இந்திய வீரர்கள் யஜூர்வீந்திர சிங், முகமது அசாருதீன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங், தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டேரன் சமி, ட்வைன் பிராவோ, பிளாக்வுட், இந்திய வீரர் அஜிங்ய ரஹானே, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 11 வீரர்களுக்கு அடுத்தபடியாக, ஒரு இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். 

மேலும் இந்த சாதனையை முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்த 12வது சர்வதேச வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.
 

click me!