
BCCI Seeks New Sponsor for Indian Cricket Team! இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக ஆன்லைன் கேமிங் நிறுவனமான டிரீம் 11 இருந்து வந்தது. பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. டிரீம் 11 இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. 2023-ல் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு Dream11 உடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் முன்கூட்டியே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் எந்த நிறுவனம்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தீவிரமாக தேடி வருகிறது. ஆண் மற்றும் பெண் அணிகளின் முதன்மை ஸ்பான்சர்ஷிப்புக்காகவே பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க செப்டம்பர் 16 கடைசி நாள். செப்டம்பர் 9-ல் தொடங்கும் ஆசிய கோப்பையில், இந்திய அணி முதன்மை ஸ்பான்சர் பெயர் இல்லாத ஜெர்சியுடன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
கடுமையான நிபந்தனைகளை விதித்த பிசிசிஐ
முந்தைய ஸ்பான்சர்கள் சர்ச்சையில் சிக்கியதால், இம்முறை கடுமையான விதிமுறைகளை பிசிசிஐ விதித்துள்ளது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்றவை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளில் ரூ.300 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஜெர்சி ஸ்பான்சராக விண்ணப்பிக்க முடியும். ஸ்பான்சர்ஷிப் பெறும் நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்டம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.
ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்ற நிறுவனங்கள் என்னென்ன?
கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள், மதுபான உற்பத்தியாளர்கள், ஆபாச வலைத்தளங்கள், புகையிலை நிறுவனங்கள் ஆகியவையும் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்றவை. கூடிய விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர் நிறுவனம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதால் பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.