ஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..!

By karthikeyan VFirst Published Jan 27, 2021, 4:34 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி பரோடா அணி, 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. காலிறுதி போட்டிகள் நடந்துவரும் நிலையில், நேற்று நடந்த 2 காலிறுதி போட்டிகளில், ஒன்றில் பஞ்சாப் அணியும் மற்றொன்றில் தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 3வது காலிறுதி போட்டி அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி நடந்தது.

டாஸ் வென்ற பரோடா அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணி, 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது. பரோடா அணியின் தொடக்க வீரர் சைதன்யா பிஷ்னோய் 21 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஹிமான்ஷு ராணா பொறுப்புடன் ஆடி 49 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய ஷிவம் சௌகானும், ராணாவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் அடித்தார். ஆனால் அவர்கள் இருவருமே அதிரடியாக ஆடவில்லை. ராணா 40 பந்தில் 49 ரன்களும் ஷிவம் சௌகான் 29 பந்தில் 35 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 20 ஓவரில் ஹரியானா அணி 148 ரன்கள் அடிக்க, 149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பரோடா அணியின் தொடக்க வீரர் ஸ்மித் படேல் 21 பந்தில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கேதார் தேவ்தர், 40 பந்தில் 43 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர்கள் இருவருமே பந்துக்கு நிகரான ரன்களே அடித்தனர்.

3ம் வரிசையில் இறங்கிய விஷ்ணு சோலங்கி அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ததால், விக்கெட்டை இழந்துவிடாமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினாலே போதும் என்பதால் தான், கேதார் தேவ்தர் நிதானமாக ஆடி அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதிரடியாக ஆடிய விஷ்ணு 46 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று பரோடா அணியை வெற்றி பெற செய்தார். 

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பரோடா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி காலிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு பீகார் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது.
 

click me!