ஸ்டீவ் ஸ்மித் எட்டிய மற்றுமொரு மைல்கல்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த ஸ்மித்

By karthikeyan VFirst Published Dec 26, 2019, 11:45 AM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக பல சாதனைகளை குவித்துவருகிறார். 

ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித்தின் பேட்டிங், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பிய பிறகு, மேலும் சிறப்படைந்துள்ளது. ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 775 ரன்களை குவித்தார். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார்.

 

அதன்பின்னர் பாகிஸ்தான் தொடரிலும் நன்றாக ஆடினார். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். வார்னரை 41 ரன்களில் வாக்னரும், அரைசதம் அடித்த லபுஷேனை 63 ரன்களில் டி கிராண்ட் ஹோமும் வீழ்த்தினர். 

வழக்கம்போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடிய ஸ்மித், அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஸ்மித், சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்த மேத்யூ வேட், 38 ரன்களில் டி கிராண்ட் ஹோமின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்த போட்டியில் அரைசதம் கடந்து ஆடிவரும் ஸ்மித், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் கிரேக் சேப்பலை பின்னுக்குத்தள்ளி 10வது இடத்தை பிடித்துள்ளார் ஸ்மித். கிரேக் சேப்பல், 7110 ரன்களுடன் 10ம் இடத்தில் இருந்துவந்தார். 

கிரேக் சேப்பலை விட அதிக ரன்கள் அடித்துவிட்ட ஸ்மித், அவரை பின்னுக்குத்தள்ளி பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் 13,378 ரன்களை குவித்துள்ள ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 11,174 ரன்களை குவித்துள்ள ஆலன் பார்டர் இரண்டாமிடத்திலும், 10,927 ரன்களை குவித்துள்ள ஸ்டீவ் வாக் மூன்றாமிடத்திலும் உள்ளனர். நான்காமிடத்தில் மைக்கேல் கிளார்க்கும், ஐந்தாமிடத்தில் மேத்யூ ஹைடனும் ஆறாம் இடத்தில் மார்க் வாக், ஏழாம் இடத்தில் ஜஸ்டின் லாங்கர், எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்தில் மார்க் டெய்லர் மற்றும் டிசி பூனும் உள்ளனர். 

இவர்களுக்கு அடுத்த இடத்தை ஸ்மித் பிடித்துள்ளார். ஸ்மித்தின் கெரியர் முடிவதற்குள் டாப் 3 இடங்களில் இடம்பிடித்துவிடுவார். 

click me!