மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியா வெற்றி.. இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 5:26 PM IST
Highlights

மகளிர் டி20 உலக கோப்பையின் அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது.
 

மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. லீக் சுற்றின் முடிவில் இங்கிலாந்தைவிட அதிக புள்ளிகளை பெற்றது இந்திய அணி என்பதால், அதனடிப்படையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இதையடுத்து ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான அரையிறுதி போட்டியும் இன்றே நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 134 ரன்கள் அடித்தது. 

இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு, மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதனால் டி.எல்.எஸ் முறைப்படி 13 ஓவரில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி 13 ஓவரில் 92 ரன்கள் மட்டுமே அடித்ததையடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

இறுதி போட்டி மெல்பர்னில் வரும் 9ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை ஏற்கனவே வீழ்த்தியுள்ள இந்திய அணி, அதே நம்பிக்கையுடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. லீக் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு, இறுதி போட்டியில் பழிதீர்த்து, சொந்த மண்ணில் கோப்பையை தூக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். 

click me!