ஒரு விஷயத்துல கோட்டை விட்டுட்டோம்.. இல்லைனா 2011ல் கோப்பையை நாங்க தூக்கியிருப்போம்..! ஆஞ்சலோ மேத்யூஸ் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 20, 2020, 6:55 PM IST
Highlights

2011 உலக கோப்பை குறித்து இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ் பேசியுள்ளார். 
 

2011 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து 2011 உலக கோப்பையை இந்தியா வென்றது. அந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது.

அந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக வென்றது. 

மும்பை வான்கடேவில் நடந்த இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, ஜெயவர்தனேவின் அபாரமான சதத்தால் 50 ஓவர்களில் 274 ரன்களை குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. 31 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அப்போதைய இளம் வீரர் கோலி, கம்பீருடன் இணைந்து சிறப்பாக ஆடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்க்க உதவினார். கோலி அவுட்டான பிறகு, கம்பீருடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

அருமையாக ஆடிய கம்பீர், 97 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் யுவராஜும் சேர்ந்து இலக்கை 49வது ஓவரில் எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். தோனி 91 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குலசேகராவின் பந்தில் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த தருணத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். 

அந்த போட்டி ஃபிக்ஸிங் செய்யப்பட்டது என்று இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் கிளப்பிவிட்ட சர்ச்சை, பின்னர் விசாரித்து, ஃபிக்ஸிங்கெல்லாம் நடக்கவில்லை என்று முடிக்கப்பட்டது. 

இந்நிலையில், 2011 உலக கோப்பை இறுதி போட்டி குறித்து ஆஞ்சலோ மேத்யூஸ் பேசியுள்ளார். ஆல்ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ் அந்த போட்டியில் ஆடியிருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும் என்று முன்னாள் கேப்டன் சங்கக்கராவே கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த உலக கோப்பை இறுதி போட்டி குறித்து ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஆஞ்சலோ மேத்யூஸ், இறுதி போட்டியில் ஆடும் ஆர்வத்தில் இருந்த என்னால் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆடமுடியாமல் போனது. இலங்கை அணி இறுதி போட்டியில் நன்றாகத்தான் ஆடியது. 320 ரன்கள் அடித்திருந்தால் இந்தியாவிற்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஏனெனில் இந்திய அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணி. இந்திய ஆடுகளங்கள் ஃப்ளாட்டாக இருக்கும். எனவே ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நிலைத்துவிட்டால், அவரை வீழ்த்துவது கடினம்.

இறுதி போட்டியில் இலங்கை அணி கூடுதலாக 20-30 ரன்கள் அடித்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம். முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியதால், வெற்றி வாய்ப்பு இலங்கைக்கு இருந்தது. ஆனால் கம்பீரும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அதன்பின்னர் தோனி வந்து முடித்துவிட்டார் என்று மேத்யூஸ் தெரிவித்தார். 
 

click me!