கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எது பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து கூறியுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டு, வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது கேப்டன்சி திறமையை நிரூபித்திருக்கிறார். ரோஹித் சர்மா வீரர்களை நன்கு கையாளத் தெரிந்த மற்றும் களவியூகங்களை வகுப்பதிலும் சிறந்த கேப்டன் ஆவார். எனவே இந்திய அணி சரியான ஒரு கேப்டனிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதே அனைவரின் கருத்தும்.
ரோஹித் சர்மா அவ்வப்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தாலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடக்கவுள்ள ஒருநாள் தொடர் தான், அவர் முதல் முறையாக முழு நேர கேப்டனாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவுள்ள முதல் தொடர். எனவே இந்த தொடரின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரோஹித் சர்மா முழு நேர கேப்டனாக அவர் செயல்படவுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எது பெரிய சவாலாக இருக்கும் என்று அஜித் அகார்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது நல்ல விஷயம் தான். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஒரே கேப்டனை நியமிப்பதுதான் சரி. ரோஹித் சர்மாவிற்கு இருக்கும் ஒரே சவால், அவர் ஃபிட்டாக இருப்பதுதான். உலக கோப்பைக்கு அணியின் கேப்டன் மிக முக்கியம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் உலககோப்பை தொடர்கள் நடக்கவுள்ளதால் ரோஹித் சர்மா ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.