கொரோனாவிலிருந்து ஆஸ்திரேலிய முதியோர்களை காத்த இந்திய செவிலியர்..! மனதார பாராட்டிய ஆடம் கில்கிறிஸ்ட்

By karthikeyan VFirst Published Jun 12, 2020, 4:11 PM IST
Highlights

கொரோனாவிலிருந்து முதியோர்களை காக்க, அரும்பாடுபட்ட இந்திய நர்ஸை ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக புகழ்ந்துள்ளார். 
 

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் வேளையில், கொரோனாவிலிருந்து மக்களை காக்கும் தன்னலமற்ற சேவையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போரில், முன்னின்று பணியாற்றும் இந்த முன்கள பணியாளர்கள் உலகம் முழுதும் போற்றப்படுகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ஷெரோன் வர்கீஸை ஆடம் கில்கிறிஸ்ட், அவரது சேவைக்காக பாராட்டியுள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியை சேர்ந்த ஷெரோன் வர்கீஸ், 2016ம் ஆண்டு செவிலியர் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு செவிலியர் படிப்பை முடித்த ஷெரோன் வர்கீஸ், சேவை மனப்பான்மையுடன், அங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பணியாற்றிவந்தார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான சூழலில், கொரோனாவிலிருந்து, அந்த முதியோர் இல்லத்தில் இருந்த முதியோர்களை காக்க அரும்பாடுபட்டுள்ளார் ஷெரோன் வர்கீஸ். முதியோர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்கும் என்பதால், முதியோர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்தது.

ஷெரோன் வர்கீஸ், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். வெளியிலிருந்து வருபவர்களை தடுத்ததுடன், மற்ற பணியாளர்கள் மூலம் கொரோனா பரவிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார். முதியோர்களை காப்பதில் தன்னலமில்லாமல், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி, அந்த இல்லத்தில் இருந்த முதியோர்களுக்கு கொரோனா தொற்றாமல் பாதுகாக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதையறிந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய செவிலியரான ஷெரோன் வர்கீஸை மனதார பாராட்டியுள்ளார். “உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் ஷெரோன். இந்தியாவிலிருந்து கல்விக்காக ஆஸ்திரேலியா வந்த நீங்கள், முதியவர்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது. உங்கள் சேவையால், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இந்த சேவையை தொடர்ந்து செய்யுங்கள்” என்று கில்கிறிஸ்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கில்கிறிஸ்ட்டின் வாழ்த்தை கேட்டு நெகிழ்ந்துபோன ஷெரோன், கிரிக்கெட் ரசிகரான தனது தந்தை கில்கிறிஸ்ட்டின் வாழ்த்தால் சந்தோஷப்படுவார் என்று ஷெரோன் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!