பாபர் அசாம் அப்படியே சச்சின் டெண்டுல்கர் மாதிரி; கோலி அவரிடமிருந்து கத்துக்கணும்! பாக்., முன்னாள்வீரர் கருத்து

By karthikeyan VFirst Published Apr 11, 2021, 5:39 PM IST
Highlights

ஸ்விங் பவுலிங்கை ஆடுவது எப்படியென்று விராட் கோலி, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமென பாக்., முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சனை போலவே பாபர் அசாமும் 3 விதமான போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார்.

விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்பட்டது போய், இப்போது பாபர் அசாமிடமிருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுமளவிற்கு ஆகிவிட்டது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 103, 31, 94 ரன்களை குவித்து ஒருநாள் தொடரை வெல்ல உதவிய பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டிலும் அபாரமாக ஆடிவருகிறார்.

இந்நிலையில், பாபர் அசாம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆகிப் ஜாவேத், ஸ்விங் பவுலிங்கை எதிர்கொள்வது எப்படி என்று கோலி பாபர் அசாமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாவேத் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாவேத், பாபர் அசாமுடன் ஒப்பிடுகையில், விராட் கோலி அனைத்துவிதமான ஷாட்டுகளையும் வைத்துள்ளார். ஆனால் கோலிக்கு எப்போதுமே ஒரு ஏரியா மட்டும் பலவீனமாக இருந்துவந்துள்ளது. ஸ்விங் ஆகும் பந்துகளை எதிர்கொள்ள சற்றே திணறியிருக்கிறார். குறிப்பாக இங்கிலாந்தில் ஆண்டர்சனுக்கு எதிராக கோலி திணறியதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் பாபர் அசாமிற்கு அப்படியான எந்த பலவீனமும் கிடையாது. எந்த ஏரியாவும் பாபர் அசாமிற்கு பலவீனம் கிடையாது. சச்சின் டெண்டுல்கரை போல பலவீனம் என்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லாத பேட்ஸ்மேன் பாபர் அசாம். எனவே ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது எப்படியென்று கோலி, பாபர் அசாமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளையில், பாபர் அசாம் கோலியிடமிருந்து ஃபிட்னெஸை கற்றுக்கொண்டால் பாபர் அசாம் மேலும் மிளிரலாம் என்று ஜாவேத் தெரிவித்துள்ளார்.
 

click me!