ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: 3 பெரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி

By karthikeyan VFirst Published Aug 6, 2020, 5:11 PM IST
Highlights

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்கு 3 முக்கியமான பெரு நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் 13வது சீசன், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் அணிகளும் வீரர்களும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். 

இதற்கிடையே, இந்தியா - சீனா இடையேயான உறவில், எல்லையில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலால் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான பல கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. ஹெலோ ஆப், ஷேர் இட், டிக் டாக் உள்ளிட்ட 49 சீன செயலிகளையும் அதைத்தொடர்ந்து மேலும் சீன செயலிகளையும் தடை செய்தது இந்திய அரசு. அதேபோல இந்தியாவில் முதலீடு செய்வதிலும் சீனாவிடம் கடுமை காட்டிவருகிறது இந்திய அரசு. 

சீனா மீது பொருளாதார ரீதியான அதிரடியான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. ஆனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மட்டும் சீன நிறுவனமான விவோ. எனவே சீன நிறுவனமான விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில், விவோ-வே ஸ்பான்ஸராக தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டதையடுத்து, அது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், விவோவுடனான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும், ஐபிஎல் 13வது சீசனுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சர் என்பதையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. 

எனவே பிசிசிஐ புதிய ஸ்பான்சரை தேடிவருகிறது. கோகோ-கோலா, பைஜூஸ் மற்றும் அமேசான் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை தட்டித்தூக்கும் முனைப்பில் உள்ளன. கோலா, பைஜூஸ், அமேசான் ஆகிய 3 நிறுவனங்களும் டைட்டில் ஸ்பான்சருக்காக போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏலத்தின் மூலம் மூவரும் கோட் செய்யும் தொகையை பொறுத்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உறுதி செய்யப்படும். 
 

click me!