
இந்தியாவில் புகழ்பெற்ற பல விநாயகர் கோயில்கள் உள்ளன. ஆனாலும் அடர்ந்த வனப்பகுதியில் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு சின்ன விநாயகர் சன்னதியின் வீடியோ சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இந்த கோயில் சத்தீஸ்கரில் உள்ள தோல்கால் மலையில் (Dholkal Hill) அமைந்துள்ளது. முரசு வடிவில் உள்ளதால் இக்கோயில் தோல்கால் கணேஷ் டெம்பிள் என அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கும் இந்தக் கோயில் (Dholkal Ganesh temple) பைலடிலா மலைத்தொடரில் உள்ளது. இந்த மலைத்தொடர் இரும்புத்தாது நிறைந்த காடுகளில் முக்கியமானது.
இந்த மலையின் உயரத்தை காண்போர் தலைசுற்றி போவர். ஆனால் இந்த மலையின் மீது ஏறி பூசாரி ஒருவர் பூஜை செய்து வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விநாயக பெருமானுக்கு பூசாரி ஆரத்தி காட்டும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 460k விருப்பங்களையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவிற்கு கீழே, "பூசாரிக்கு அதிக தைரியம் இருக்கிறது ஐயோ, நான் அவருடைய இடத்தில் இருந்திருந்தால், அங்கே நிற்க கூட என் கால்கள் நடுங்கும்...(கடவுள் அவரை நன்றாக கவனித்துக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்)," என கருத்துக்களை மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த கோயில் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் நாக்வன்ஷி வம்சத்தின் போது உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு சாலை வசதி இல்லாததால் வனப்பாதை வழியாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நடைபயணம் செய்தால் கோயிலை அடையலாம்.
வரலாறு
இங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் பரவலான நம்பிக்கையின்படி, வெகுகாலத்திற்கு முன்பு தோல்கால் மலையில் விநாயகனுக்கும், பரசுராம முனிவருக்கும் இடையே போர் மூண்டுள்ளது. பரசுராமர் தனது கோடரியால் விநாயகரை கடுமையாகத் தாக்கிய உக்கிரமான போர் இது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமம் இன்றும் ஃபர்சபால் என அழைக்கப்படுகிறது. இந்த போரில் யார் வெற்றி பெற்றார் என்பது குறித்த மர்மம் இன்னும் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் எந்த மலர்களால் சிவபெருமானை வழிபட்டால், ஜென்ம பாவம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்?
இதையும் படிங்க: தாமிரபரணி நதிக்கரையோரம் வீற்றிருக்கும் நவகைலாயங்கள்... தோஷங்கள் விலக்கும் அதன் அதிசய வரலாறு தெரியுமா?