ஹோம குண்டத்தில் போடும் சமித்துகள் என்றால் என்ன? நன்மை தரும் ஹோமங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பூஜையின் போது மந்திரம் உச்சரித்து அக்னி குண்டத்தில் போடும் குச்சிகளைதான் சமித்து என்பர். ஒவ்வொரு வகையான சமித்து குச்சியும் வெவ்வேறு பலன்களை கொண்டது. அதை பயன்படுத்தி யாகம் செய்யும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். பார்க்க அந்த குச்சிகள் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஏற்ற சமித்துகள் உள்ளன.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களை அடையலாம். சிவசக்தி தொடர்பான சண்டி யாகங்களில் வில்வம் சமித்தாக உபயோகித்தால் பலன்கள் நிறைய உண்டு. துளசி சமித்தினால் யாகம் செய்யும்போது திருமண தடை விலகும். நினைத்த காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி - கொடிக்கள்ளி எனும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரம் சொல்லி யாகம் செய்தால் அனைத்து நோய்களும் விலகி ஓடும். இதனால் பிரம்மதேஜஸ் அடையலாம். இந்தக் கொடியை கணுவினை ஒடித்து பாலில் நனைத்து சூர்ய மந்திரம் சொல்லி அக்னியிடம் இட்டால் காச நோய் விலகும்.
பலாசு சமித்து - இதை சந்திரகிரக சமித்து என்பார்கள். பலாசு மலர்களால் விருப்ப காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும் கூட கிடைக்கும்.
அரசு சமித்து- இதை வைத்து யாகம் செய்தால் தலைமைப் பதவி கிடைக்கும். போரில் வெற்றி பெற இதை வைத்து தான் யாகம் செய்வார்கள்.
வெள்ளை எருக்கு- இதனை சூரிய கிரக சமித்து என சொல்வார்கள். இந்த மூலிகை சர்வசக்தி உடையது. இந்த சமித்துகளால் ராஜ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் உள்ளிட்ட பல்வேறு வசியங்களை அடையலாம்.
நாயுருவி சமித்து - புதன் கிரக சமித்தான இதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சுதர்சன ஹோமத்திற்கு ஏற்றது.
அத்தி சமித்து - சுக்கிர கிரகத்தின் சமித்தான இதை வைத்து யாகம் செய்தால், பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கையில் கிடைக்கும். பில்லி, சூனியம், பிசாசு ஆகிய அச்சங்களை விடுத்து சத்ருக்களை வெற்றி காண உதவும். இதைப் போலவே வேங்கை மரம் சமித்தும் பில்லி, சூனியம், பிசாசு ஆகிய அச்சங்களை துரத்தும்.
வன்னி சமித்து - இது சனிக் கிரக சமித்தாகும். வன்னி சமித்தில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வத்தினையும், மூவுலகினையும் முக்குணங்களையும் குறிப்பதாக உள்ளது. எல்லா தோஷங்களும் விலகும்.
தர்ப்பை சமித்து- கேதுவிற்கு பிடித்த இந்த சமித்து, ஞான விருத்தி அருளும்.
அருகம்புல் - ராகுக்கு பிடித்த இந்த சமித்து பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கி காரியம் கைகூட உதவும். கீர்த்தியும், புகழும் அடையலாம். ஞானம் கிடைப்பதோடு அழகும் மெருகேறும். விநாயகர் ஹோமத்தில் இதை உபயோகம் செய்வர்.
கரும்பு - கரும்புத் துண்டுகள் அல்லது கருப்பஞ்சாறையை வைத்து யாகம் செய்தால் ஆணுக்கு விரும்பிய கன்னியும், கன்னிக்கு விரும்பிய துணையும் கிடைப்பார்கள். இதையும் விநாயகர் ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து - இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. எமனுக்கு விருப்பமானது. நோய்கள் நீங்கி ஆயுள் நீடிக்கும்.
எள் - ஹோமத்தில் எள் இட்டு யாகம் செய்தால் பல ஜென்ம பாவங்கள் விலகும். தீராத கடன் தொல்லையும் தீரும்.
சந்தன மரம் - இதில் யாகம் செய்தால் மூதேவி உள்ளிட்ட எல்லா பீடைகளையும் அகற்றி லட்சுமி கடாட்சம் வரும்.
வல்லாரைக் கொடி -கல்வி மேம்படும். ஞாபக சக்தி பெருகும். சரஸ்வதி கடாட்சமும் உண்டாகும்.
பூவரசு - இதனை பூலோக அரச மரம் என்பார்கள். அரசு சமித்து இல்லாத குறையை இதை வைத்து நிவர்த்தி செய்யலாம்.