கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார்கள். இந்த கலிகாலத்தில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் எல்லாம் கலங்கித்தான் போயிருக்கிறார்கள். சில நேரம் தேவைக்கு, பல நேரம் ஆசைக்கு கடன் அட்டையை தேயோ… தேய் என்று தேய்த்துவிட்டு கிரெடிட் கார்டு பில் வரும்போது குய்யோ முய்யோ என்று மனதுக்குள் குமைகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கவலை தீர சுக்கிர வழிபாடு செய்ய வேண்டும்.
நவக்கிரகங்களில் உள்ள முக்கியமான கிரகமாக சுக்கிர கிரகம் போற்றப்படுகிறது. சுக்கிர யோகமும் சுக்கிர அருளும் கிடைக்கவேண்டும் எனில் நவக்கிரகத்தை முடியும் போதெல்லாம் வலம் வர வேண்டும். தசாபுத்திகளிலேயே சுக்கிர தசைதான் ஒருவருக்கு சூப்பர். ஒருவருக்கு வாழ்வில் சுக்கிர யோகம் என்பது மிக மிக அவசியம். வாழ்வில் என்ன நல்லது நடந்தாலும், ‘அவருக்கு சுக்கிர யோகம்பா’ என்று கமென்ட் அடிப்போம்.
ஒருவரது வாழ்வில் செல்வ வளம் பெற வேண்டுமானால், ஜாதகத்தில் அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் சுக்கிரனை வணங்கினால் செல்வ வளம் பெறலாம். காரணம், சுக்கிரனுக்கு அதிபதி மகாலக்ஷ்மி. சுக்கிரனை வணங்கினால் மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கப் பெற்றால்தான் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். பொன்னும் பொருளும் நிறைந்திருக்க இனிய வாழ்க்கை அமையும்.
சுக்கிர வாரம் என்று வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் இது. மகாலட்சுமியை வணங்குவதற்கும் வெள்ளிக்கிழமை உகந்த நாளாகும். எனவே, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யவேண்டும். அதேபோல், நவக்கிரகங்களில் உள்ள சுக்கிர பகவானை வணங்க வேண்டும். ஒன்பது முறை வலம் வந்து சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் சொல்லி மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். மங்காத புகழையும் செல்வத்தையும் பெறலாம். அதன் மூலம் கடனின்றி காலம் தள்ளலாம்.
சுக்கிரன் ஸ்லோகம்
ஹிமகுந்த ம்ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்!
*
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்
*
நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவான் சந்நிதியில் சுக்கிர பகவானுக்கு முடிந்தால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். இளம்பச்சை அல்லது வெண்மை நிறத்திலான வஸ்திரம் சார்த்தி வழிபடுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் சுக்கிர பகவான். தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வாள் மகாலட்சுமி தாயார்.