மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பண்டையகால முறைப்படி பறை, தாரை, தப்பட்டைகள் முழங்க கோபுர கலசங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்களால் பாடல் பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும். அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த இந்த ஆலயம் காசிக்கு நிகரான ஆறு ஆலயங்களில் ஒன்றாகும். ஆலயத்தின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் வர்ணங்கள் தீட்டப்பட்டு வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது.
123 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம், சுவாமி அம்பாள் கருவறை கோபுரங்கள், பரிவார தேவதைகள், கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் ஆலயத்தில் அமைந்துள்ளன. சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமான இந்த ஆலயத்தின் முதல் கால யாகசாலை பூஜைகள் இன்று மாலை துவங்க உள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றன.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்; உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 84 கோபுர கலசங்களும் மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து ஊர்வலமாக மாயூரநாதர் ஆலயத்தை வந்தடைந்தன. அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல பண்டைய முறைப்படி பறை, தாரை, தப்பட்டை, மல்லாரி மேளங்கள் முழங்க ஊர்வலம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் வெள்ளப்ப சுவாமிகள் மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.