திருவள்ளூர் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகன் கோவிலில் சிறப்புடன் நடக்கும் சூரசம்ஹார விழா தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் வீரதீரங்களை கொண்டாடும் விழாவாகும். எம்மை நம்பினோர் அஞ்சுவதொன்றுமில்லை என்பதற்கேற்ப முருகப்பெருமானை அடைக்கலம் அடைந்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை விழாவாக கொண்டாடும் விழா சூரசம்ஹார விழாவாகும். தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையன்று காப்பு கட்டிகொண்டு தொடங்கும் இவ்விழாவை முருகன் கோவில் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெறும். கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் காப்பு கட்டிகொண்டு விரதத்தை தொடங்குவார்கள். சிலர் ஆலயத்தில் தங்கி விரதம் முடிப்பர். சிலர் தினமும் ஆலயத்துக்கு வந்து வழிபடுவர். தினமும் காலையிலும் மாலையிலும் ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களும் உண்டு. விரதம் முடிந்த ஐந்தாம் நாள் விழா தனிச்சிறப்பு மிக்கது. சூரனை வெல்ல முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்குவார். முருகன் வேடம் அணிந்து நவவீரர்கள் புடை சூழ பக்தர்களுடன் கூடி அம்பிகை சந்நிதியை அடைவார். அங்கு அன்னையின் அருளை பெற்று சூரனை வெல்ல ஆசியும் உடன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.
இதையும் படிங்க: சஷ்டி விரதத்தில் முருகனின் இந்த மந்திரங்களை உச்சரிக்கலாம்!!
இதை பாடல்களாகவும் விருத்தங்களாகவும் பாடி பிறகு அன்னையின் கரத்தில் இருக்கும் வேலை அர்ச்சகர் எடுத்து வந்து உலாத்திருமேனியாக வந்த முருகனுக்கு சார்த்துவார். பிறகு வேறு ஒரு வேலை அம்பிகையிடம் இருந்து எடுத்து வந்து முருகன் வேடம் பூண்டவரிடம் அளிப்பார்கள். பிறகு வீதி உலா வந்து முருகனை கொலு மண்டபத்தில் வைப்பர். அடுத்த நாள் முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது வேலுக்கும் சிறப்பான அபிஷேகம் நடைபெறும். மாலை சூரசம்ஹார விழா நடக்கும். அப்போது பெரிய சூரன் உருவை போன்று வைக்கோல் காகிதம் மூங்கில் சிம்புகள் முதலியவற்றை கொண்டு தயாரித்து வண்டியில் வைத்து உலா வருவார். அப்போது அவர்களுடன் சூரபத்மன், தாரகன் அஜமுகி, பானுகோபன் போன்ற வேடம் தரித்தவர்களும் உடன் வருவர். அப்போது சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் குறித்த காட்சிகள் விளக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் முருகனும் முருகன் போன்ற வேடமிட்டவரும் பரிவாரங்களுடன் அங்கு வருவார். அப்போது சண்டை தொடங்கும். யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கமுகன் என அனைவரையும் வென்று இறுதியில் சூரபத்மனுடன் போர் புரிவார் வீரவாகு தேவர். அப்போது முருகனும் முருகன் போன்று வேடமணிந்தவரும் போரிட வருவார். இறுதியாக சூரபத்மனை வதம் செய்வர். மறுநாள் சப்தமியன்று சாந்தி அபிஷேகமும் முருகப்பெருமானுக்கு தெய்வானை திருமணமும் நடைபெறும். முருக கோயில் அனைத்திலும் சூரசம்ஹார விழா நாடகங்கள், பாடல்கள் என்று கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க: சூரசம்ஹாரத்தால் வீரஹத்தி தோஷத்துக்கு உள்ளான முருகனுக்கு தோஷம் நீக்கிய இடம் இதுதான்!
எனினும் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார பெருவிழா உலகபுகழ்பெற்றது. சென்னை, சின்னம்பேடு பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி திருத்தலம் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலிலும் கந்த சஷ்டி கவசம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 25.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று திருக்கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. மாலை கிரஹணசாந்தி அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீ சுப்ரமனிய சுவாமி உள்புறப்பாடு நடந்தது. தினமும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி உள்புறப்பாடு நடந்தது. கடந்த சனிக்கிழமை ஸ்ரீ சண்முகர் வேல் வாங்குதல் நிகழ்வும், நேற்று சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்கமும் நடந்தது. நாளை திருக்கல்யாண உற்சவமும் அதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெறவிருக்கிறது. சிறுவாபுரி முருகப்பெருமானை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமை தரிசித்தால் வீடு கட்டும் யோகம் அமையும் என்பது ஐதிகம். அது உண்மையும் கூட. நேரம் கிடைத்தால் சிறுவாபுரிநாதனை தரிசியுங்கள்.