Nellaiappar Gandhimati Ambal Temple : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம் கோவில் மஹா மண்டபத்தில் ஏற்றப்பட்டது. இந்த சுப நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் காா்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தீப திருவிழா, 2 தினங்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திரு கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி நேற்று மாலை திருக்கோயில் சாயரட்சை பூஜைகள் முடிவடைந்ததும் சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து 3 அடி உயரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீப சுடர் எடுத்துவரப்பட்டு பரணி மஹா தீபம் சிவாச்சாரியார்களால் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றும் இன்றும் பரணி மஹாதீபம் சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் தொடர்ந்து எறியும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஏற்றப்பட்ட இந்த பரணி தீபம் இன்று திருக்கார்த்திகை தினத்தன்று சிவாச்சாரியார்கள் தலையில் ஊர்வலமாக சுமந்து எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும் மஹா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனைக்கு சுடர் எடுத்து ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.