மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!

By Ma RiyaFirst Published Feb 17, 2023, 10:22 AM IST
Highlights

Maha Shivaratri viratham rules: மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்... 
 

மகா சிவராத்திரி என்பது 'சிவனின் சிறந்த இரவு'ஆகும். மகா சிவராத்திரி, சிவன், சக்தியின் இணைவை நினைவூட்டும் தினமும் கூட. இந்த ஆண்டு சிவராத்திரி நாளை (பிப்.18) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியில் விரதம் இருப்பது குடும்பத்திற்கு நல்லது. நினைத்த காரியங்கள் கைகூடும்.

இந்து சாஸ்திரங்களின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்கு ஏற்ற நாளாக சிவராத்திரி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் குறைந்து, வசந்த காலமும் கோடைகாலமும் தொடங்கும் சமயத்தில் தான் சிவராத்திரி வரும். இது நம் வாழ்வில் இருளையும் அறியாமையையும் நீக்கி, வாழ்வில் புத்துயிர் பெற ஞான உணர்வை அருளும். பலர் அன்றைய தினம் உறங்காமல் விடியவிடிய விரதமிருந்து சிவனை மனமுருகி வழிபடுவர். சிவனின் திருநாமத்தைப் பாடுவர். 

பூஜை நேரம் 

2023இல் மகா சிவராத்திரி நாளை (பிப்.18, தமிழ் மாதம் மாசி 6) சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதில் சதுர்த்தசி திதி பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 08:02 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 04:18 மணிக்கு முடிவடைகிறது. விரதமிருப்பவர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று மாலை விரதத்தைத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விரதத்தை முடிப்பார்கள். பிப்.18ஆம் தேதி பகல் முழுவதும் உறங்கக்கூடாது. அன்று இரவும் தூங்காமல் கோயில்களில் நான்கு கால பூஜைகளில் பங்கேற்க வேண்டும். நான்கு கால பூஜைக்கும் கண் விழிக்க முடியாத நபர்கள் 3ஆவது கால பூஜையில் கண்டிப்பாக கண் தூங்காமல் கண் விழித்து, சிவனை வணங்க வேண்டும். பிப்.19ஆம் தேதி மாலை 6 மணிக்கு பின்னர் சிவனுக்கு விளக்கேற்றி வழிபட்ட பின் தூங்கலாம். 

நான்கு கால சிவபூஜை செய்ய சிவராத்திரியின் முழு இரவையும் நான்காக பிரித்து கொள்வர். 

  1. முதல் பூஜை நேரம் - மாலை 06:13 மணி முதல் இரவு 09:24 மணி வரை
  2. இரண்டாவது பூஜை நேரம் - இரவு  09:24 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணி வரை 
  3. மூன்றாம் பூஜை நேரம் - பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணி முதல்  அதிகாலை 03:46 மணி வரை 
  4. நான்காம் பூஜை நேரம் -  பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாலை 03:46 முதல் 06:56 வரை 

மகா சிவராத்திரி சிறப்புகள் 

விரதமிருக்கும் பலர் கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு அல்லது வீட்டில் பிரார்த்தனை செய்வதற்கு முன்பு மாலையிலும் இரண்டாவது முறையாக நீராடி கொள்கிறார்கள். சுத்தமாக இருப்பது அவசியம். அன்றைய நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் நடை சாத்தப்படாமல் திறந்திருக்கும். வழக்கமாக சிவன் கோயில்கள் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜையை முடித்து நடையை சாத்திவிடுவார்கள். மகா சிவராத்திரி அன்று மட்டும் விடியவிடிய கோயில் திறந்தே இருக்கும்.  ஒவ்வொரு கால பூஜைகளும் வெகுசிறப்பாக நடக்கும். 

சிவராத்திரி விரத முக்கியத்துவம் 

மகா சிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து தூய்மையான குளிர்ந்த நீரில் நீராடவேண்டும். பின்னர் நெற்றியில் விபூதி பூசி கொள்ளுங்கள். சிவபெருமானின் படம் முன்பாக உள்ள தீபத்தை ஒளியூட்டி விரதத்தை தொடங்க வேண்டும். நாளை பகல், இரவில் ஆகாரம் ஏதும் உண்ணக்கூடாது. தண்ணீர் அருந்தலாம். சிவனின் ஜெபங்களை மனமுருகி சொல்ல வேண்டும். மனம் ஒன்றி விரதம் இருந்தால், உங்களுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கூட கிடைக்கும். எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும். நற்கதி கிடைக்கும். செல்வ செழிப்பாக இருக்கலாம். 

மனதில் கொள்ளுங்கள்! 

இன்றைய தினம் நமது உள்ளத்தின் எண்ணங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும். மன அழுக்குகளை சுயபரிசோதனை செய்யவேண்டும். சைவ மதத்தின்படி, சிவபெருமான் இந்த இரவில் தான் ஆக்கம், அழித்தல், பாதுகாத்தல் ஆகியவையும் பரவசமான அவரது பரலோக நடனத்தையும் நிகழ்த்தினார். புராண நம்பிக்கைகளின் படி, இந்த இரவில் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் கூட நடந்தது. தென்னிந்திய நாட்காட்டியின்படி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தின் போது சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. 

இதையும் படிங்க:மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் செய்யவே கூடாத தவறுகள்.. மீறினால் விரதம் இருப்பதே வீண்..!

இதையும் படிங்க: குமரியில் நடக்கும் சிவாலய ஓட்டம் மகாசிவராத்திரி அன்று ஓடி ஓடியே 12 சிவாலயங்களை தரிசிக்கும் வழிபாட்டின் பின்னணி

click me!