
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான கோபுரங்களும், கலை நயமிக்க சிற்பங்களும் தான். ஆனால், இவை அனைத்திற்கும் உயிர் நாடியாக, பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பெரும் மர்மத்தைத் தன்னுள் தேக்கி வைத்திருப்பது அங்கிருக்கும் "பொற்றாமரைக்குளம்". வெறும் நீர்த்தேக்கமாகப் பார்க்கப்படும் இந்தக் குளத்திற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்களும், இன்று வரை விடைதெரியாத அறிவியல் ஆச்சரியங்களும் வியக்கத்தக்கவை.
பொற்றாமரை குளத்தின் வரலாறு :
ஒருமுறை தேவகுருவான பிரகஸ்பதியை அவமதித்த பாவம் தீருவதற்கு என்ன வழி என தேவர்களின் தலைவனான இந்திரன், பிரகஸ்பதியிடம் கேட்டார். பூமிக்கு சென்று சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட வேண்டும் என வழிகாட்டினார் பிரகஸ்பதி. அதன் படி, பூமியில் கடம்ப வனத்திற்கு வந்த இந்திரன் ஒரு குளத்தை உருவாக்கி, அதிலிருந்து நீர் எடுத்து சிவனை பூஜித்து வந்தார். அந்த குளத்தில் தங்கத்தால் ஆன மலர்கள் பூத்தன. தங்க தாமரை மலர்களால் சிவனுக்கு தினமும் அர்ச்சனை செய்து வழிபட்டதால், இந்திரனின் பூஜைக்கு மனம் இறங்கிய, சிவபெருமான் அவருக்கு பாவ நிவர்த்தி அளித்தார். அதனால் இந்த குளத்திற்கு பொற்றாமரை குளம் என பெயர் ஏற்பட்டது.
சங்கப்பலகை தந்த தீர்ப்பு:
உலகிலேயே ஒரு குளத்தின் நீர், ஒரு நூலின் தரத்தை நிர்ணயித்தது என்றால் அது பொற்றாமரைக் குளமாகத் தான் இருக்கும். சங்க காலத்தில், புலவர்கள் எழுதிய நூல்களை இந்தக் குளத்தின் நடுவே மிதக்கும் 'சங்கப்பலகை' மீது வைப்பார்களாம். அந்த நூல் தகுதியானது என்றால் பலகை மிதக்கும், தகுதியற்றது என்றால் பலகை மூழ்கிவிடும். இது வெறும் கதையல்ல; மதுரையின் வரலாற்றில் ஊடாடிய ஒரு நுட்பமான தர்க்கம். அறிவைச் சோதிக்கும் ஒரு கருவியாக ஒரு குளம் செயல்பட்டது என்பது இன்றும் ஒரு புரியாத புதிர்தான். இதே போல் சமணர்களுக்கும், சமயர்களுக்கும் இடையே போட்டி வந்த போது சமயர்கள் போட்ட நூல்கள் நீர்ஓட்டத்தை எதிர்த்து, எதிர் திசையில் மிதந்து, கரை ஒதுங்கிய அதிசயம் நடந்த இடமே இன்றும் திருவேடம் (திரு ஏடகம்) என்னும் தலமாக மதுரையில் புகழ்பெற்று திகழ்கிறது.
குளத்தில் ஏன் மீன்கள் வளர்வதில்லை?
பொற்றாமரைக்குளத்தின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான மர்மம் - இதில் மீன்கள் வளர்வதில்லை. எந்தவொரு இயற்கை நீர்நிலையிலும் பாசிகளோ, மீன்களோ, தவளைகளோ இருப்பது இயல்பு. ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் குளத்தில் இவை எதுவுமே இருக்காது. இதற்குச் சொல்லப்படும் புராணக் கதை, ஒருமுறை குளத்தில் இருந்த மீன்களைப் பிடிக்க வந்த நாரைக்கு முக்தி அளிக்க வேண்டி, சிவபெருமான் இந்தக் குளத்தில் மீன்களே இருக்காது என அருளியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால், குளத்தின் நீர்மட்டம் மற்றும் அதன் தாதுக்களின் கலவை ஒரு குறிப்பிட்ட சமநிலையில் பராமரிக்கப்படுவதால் உயிரினங்கள் வளர முடியாத சூழல் நிலவுகிறதா என்பது ஆய்வுக்குரியது.
நிலத்தடி சுரங்கங்களும் நீர் மேலாண்மையும் :
மதுரை மாநகரம் முழுவதுமே மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளத்தின் அடியில் பல ரகசிய சுரங்கப் பாதைகள் இருப்பதாகக் காலங்காலமாக ஒரு பேச்சு உண்டு. இவை ஆபத்துக் காலங்களில் மன்னர்கள் தப்பிக்கப் பயன்படுத்தப்பட்டவை ஒருபுறம் இருந்தாலும், வைகை ஆற்றின் நீரோட்டத்தை இந்தக் குளத்தோடு இணைக்கும் ஒரு நுட்பமான "நீர்ச்சங்கிலி" தொழில்நுட்பம் அங்கே ஒளிந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வைகையில் வெள்ளம் வந்தாலும் இந்தக் குளம் பொங்காது, வைகை வற்றினாலும் இந்தக் குளம் காயாது என்ற ஒரு சமநிலை நிலவியது. இது பண்டைய தமிழர்களின் சிவில் இன்ஜினியரிங் சாதனையா அல்லது இறைசக்தியா என்பது இன்றும் பக்தர்களை வியக்க வைக்கும் மர்மம்.
பொன் தாமரை குளம் நம்பிக்கை:
இந்திரன் சிவனை வழிபடுவதற்காக இந்த குளத்தில் மலர்ந்த தங்க தாமரைகளின் அந்தத் தெய்வீக அதிர்வுகள் இன்றும் இந்த குளத்தைச் சுற்றி இருப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் உள்ள ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள், இந்தக் குளத்தில் நீராடினால் எத்தகைய பாவங்கள் நீங்கும் என்பதை ரகசியக் குறியீடுகளாகக் கொண்டுள்ளன. இந்த குளத்தில் குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்றாலும், பொற்றாமரை குளத்தை தெய்வீக தன்மை நிறைந்த குளமாக பக்தர்கள் கருதுகின்றனர்